தேர்தல் அறிக்கை குறித்து விளக்க பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே
தேர்தல் அறிக்கை குறித்து விளக்க பிரதமரிடம் நேரம் கேட்ட கார்கே
ADDED : ஏப் 26, 2024 12:54 AM
புதுடில்லி: காங்கிரசின் தேர்தல் அறிக்கையான நியாய பத்திரம் குறித்து நேரில் விளக்க, நேரம் ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
சமீபத்தில், ராஜஸ்தானில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசின் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி பேசினார்.
மகிழ்ச்சி
'மக்கள் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்களை கணக்கெடுத்து, அதனை அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும், நாட்டில் ஊடுருவியவர்களுக்கும் பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் திட்டம் போடுகிறது' என, அவர் விமர்சித்தார்.
தேர்தல் அறிக்கையில் இல்லாத ஒன்றை பேசியதாக கூறி, இது குறித்து நேரில் விளக்க தயாராக இருப்பதால், தன்னை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமருக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
காங்கிரசின் தேர்தல் அறிக்கை, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் அனைத்து ஜாதிகள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த விளிம்புநிலை மக்களுக்கு நீதி வழங்குவதை நோக்கமாக வைத்துள்ளது.
ஒரு பத்தியில் இருந்து எடுக்கப்பட்ட சில வார்த்தைகளை வைத்து வகுப்புவாத பிளவை உருவாக்குவது உங்கள் வழக்கமாகிவிட்டது. இப்படி பேசி, நீங்கள் அமர்ந்திருக்கும் பதவியின் கண்ணியத்தை குறைக்கிறீர்கள்.
எங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத விஷயங்களை பற்றி உங்கள் ஆலோசகர்களால் தவறான தகவல்கள் உங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. எங்கள் நியாய பத்திரம் குறித்து விளக்க உங்களை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சமத்துவமின்மை
அதற்கு அவகாசம் அளிக்கும் நீங்கள், அதுவரை எந்த பொய்யான அறிக்கையும் வெளியிட வேண்டாம். முதற்கட்ட தேர்தலில் கிடைத்த அதிர்ச்சியால், இப்படி பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன்.
உங்கள் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. சம்பள வர்க்கம் அதிக வரி செலுத்தும் போது, நீங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை குறைத்தீர்கள்.
அதனால்தான், ஏழை - பணக்காரர்கள் இடையிலான சமத்துவமின்மை குறித்து நாங்கள் பேசும்போது, அதை நீங்கள் வேண்டுமென்றே ஹிந்து - முஸ்லிம்களுடன் ஒப்பிடுகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

