ADDED : ஜூன் 01, 2024 01:36 AM
புதுடில்லி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:
பா.ஜ.,வை எதிர்க்கவே 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டது. அதில், அனைவரும் இணைந்து போராடுவது என முடிவு செய்தோம்.
கூட்டணி வெற்றி பெற்ற பின், யார் பிரதமர் என்பதை ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம். என்னை கேட்டால், பிரதமர் வேட்பாளராக ராகுலை தான் தேர்வு செய்வேன்.
ஏனென்றால், தேர்தலுக்கு முன் இரண்டு பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையை அவர் நடத்தியுள்ளார்.
அப்போது விரிவான பிரசாரம் மேற்கொண்டு, இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் மேடைகளை பகிர்ந்த ராகுல், அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களை ராகுல் பிரிதிநிதித்துவப்படுத்துகிறார். எனவே, அவரை தேர்வு செய்யலாம் என்பதே என் விருப்பம். மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள், பிரதமர் வேட்பாளராக என் பெயரை முன்மொழிந்தது உண்மை.
ஆனால், 2004 மற்றும் 2009 போன்ற தேர்தல் முடிவுகளின் போது ஆலோசிக்கப்பட்டது போல், இந்த முறையும் ஒன்றாக அமர்ந்து ஆலோசித்துதான் அதற்கான முடிவை எடுப்போம். எங்களுக்கென ஒரு செயல்முறை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.