எதிர்க்கட்சி தலைவர் பதவி கார்கே - தன்கர் காரசார வாதம்
எதிர்க்கட்சி தலைவர் பதவி கார்கே - தன்கர் காரசார வாதம்
ADDED : ஜூலை 02, 2024 11:31 PM

புதுடில்லி :ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சபை தலைவர் ஜக்தீப் தன்கர் இடையே காரசாரமான விவாதம் நடந்தது.
ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின்போது, துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான ஜக்தீப் தன்கர் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் என்பதற்காக எப்போது பார்த்தாலும் எழுந்து பேசுவது என்பது சரியல்ல. ஒவ்வொரு முறையும் சபைத் தலைவரை அவமதிப்பதை ஏற்க முடியாது. திடீரென எழுந்து இஷ்டம் போல் பேசுகிறீர்கள். நான் என்ன சொல்கிறேன் என்பதை காது கொடுத்து கேட்பதில்லை.
ராஜ்யசபா வரலாற்றில், நாட்டின் பார்லிமென்ட் ஜனநாயக வரலாற்றில், உங்களைப் போன்று இவ்வாறு யாரும் அவமதித்ததில்லை. புரிந்து கொள்ளுங்கள்.
உங்களுடைய மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள். உங்கள் மரியாதையை காப்பாற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அந்த நேரத்தில், காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ் எழுந்து பேச முயன்றார். அப்போது தன்கர் கூறிஉள்ளதாவது:
நீங்கள் மிகவும் புத்திசாலி; திறமையானவர். கார்கேயின் இடத்தில் நீங்கள் இருந்திருக்க வேண்டும். உண்மையில், அவருடைய வேலையை நீங்கள் செய்து வருகிறீர்கள். இது, கார்கேவுக்கு அவமானம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு கார்கே கூறியதாவது:
நீங்கள் ஜாதியின் அடிப்படையில் செயல்படுகிறீர்கள். அதனால் தான், தலித்தான எனக்கு எதிராக பேசுகிறீர்கள். என்னை, இந்த பதவியில் உட்கார வைத்தது, கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா.
ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள், என்னை ஈடு செய்ய முடியாது. அவரை புத்திசாலி என்று நீங்கள் கூறுவதைப் பார்த்தால், என்னை முட்டாள் என்கிறீர்களா.
இவ்வாறு அவர் கூறினார்.