கடத்தப்பட்ட சிறுவன் கொலை மருந்து கடைக்காரர் சிக்கினார்
கடத்தப்பட்ட சிறுவன் கொலை மருந்து கடைக்காரர் சிக்கினார்
ADDED : ஜூன் 16, 2024 01:21 AM
பரிதாபாத்:கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறுவனைக் கடத்தியவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து செலுத்தியதால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
புதுடில்லி அருகே ஹரியானாவின் பரிதாபாத் 62வது செக்டார் பல்லப்கரில் வசிப்பவர் விஷால், அதே பகுதியில் மருந்துக் கடை நடத்துகிறார்.
கடன் தொல்லையால் அவதிப்பட்ட விஷால், அதே பகுதியில் வசிக்கும் உமேஷ் சந்த் என்பவர் மகண் குஷ்,13ஐ கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்.
கடந்த வியாழன் மாலை 6:30 மணிக்கு சைக்கிளில் சென்ற குஷ்சை, விஷால் கடத்தினார். தன் வீட்டுக்குள் குஷ்ஷுக்கு மயக்க மருந்து செலுத்தினார். ஆனால், அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதால், குஷ் உயிரிழந்தான்.
அதிர்ச்சி அடைந்த விஷால், குஷ் உடலை ஆக்ரா கால்வாயில் வீசினார்.
இதற்கிடையில், மகனைக் காணாமல் தேடிய உமேஷ் சந்த் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.
விஷால் வீட்டை குஷ் கடந்த பின் மாயமானது தெரிய வந்தது விஷால் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். மொட்டை மாடியில் குஷ்ஷின் சைக்கிள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, விஷாலிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க, குஷ்ஷை கடத்தி அவனது தந்தையிடம் பணம் பறிக்க திட்டமிட்டதையும், ஆனால், அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தியதால் அவன் இறந்து விட்டதையும் ஒப்புக் கொண்டார்.
ஆக்ரா கால்வாயில் இருந்து குஷ் உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விஷாலை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.