ADDED : ஆக 08, 2024 06:06 AM

கலாசார நகரம், அரண்மனை நகரம் என அழைக்கப்படும் மைசூரில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உள்ளன. அதில், 'கிஷ்கிந்தா மூலிகை போன்சாய் பூங்கா'வும் ஒன்றாகும்.
மைசூரு ரயில் நிலையத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இப்பூங்கா அமைந்துள்ளது. 1985ல் அவதுாத தத்த பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகள் நிறுவினார்.
ராமாயண இதிகாசத்தில் வரும் குரங்குகளின் ராஜ்ஜியத்தின் பெயரே, இப்பூங்காவுக்கு வைக்கப்பட்டு உள்ளது. 4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில், 450க்கும் மேற்பட்ட நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் சிறிய மரங்களின் நேர்த்தியான சேகரிப்புகள் உள்ளன.
இம்மரங்கள் சீனா, இந்தோனேஷியா, மலேஷியா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், சிங்கப்பூர் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டன. இம்மரங்களுக்கு ஒன்று முதல் 200 வயது வரை ஆகிறது.
இதில் உள்ள சில மரங்களை, மருத்துவ நோக்கங்களுக்காக சுவாமிகள் பயன்படுத்தி வருகிறார். போன்சாய் கலை உருவான ஜென் கலாசாரத்தின் பிரதிநிதியான புத்தர் சிலைகள், குரங்கு சிலைகள், அப்பகுதியை சுற்றி பாய்ந்தோடும் நீரோடை ஆகியவை, தோட்டத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
இந்திய கலாசாரம், நம்பிக்கைக்கு ஏற்றவாறு, இந்த பூங்கா பல பகுதியாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ராசி வனத்தில்' ஹிந்து ராசிகளின் பெயரிலும்; 'ராக வனத்தில்' இந்திய பாரம்பரிய இசையுடன் தொடர்புடைய தாவரங்களும் உள்ளன. 'பஞ்சயதானா வனத்தில்' கடவுள் தேவியின் கருத்துடன் இணைக்கப்பட்ட ஐந்து தாவர தோட்டங்கள் உள்ளன. அதே சமயம் 'சப்தரிஷி வனத்தில்' ஏழு இந்திய முனிவர்களை குறிக்கும் ஏழு தாவரங்கள் உள்ளன.
இத்தோட்டத்தில் நடந்து செல்லும் போது உள்ளுக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அத்துடன் டெரகோட்டா பானைக்குள் 100 ஆண்டுகள் பழமையான மரத்தை நுணுக்கமாக வடிவமைத்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதங்களில் மூன்று நாட்கள் மாநாடு நடக்கும். இது தொடர்பாக நடக்கும் கரத்தரங்களில் பங்கேற்க, பல்வேறு நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள், போன்சாய் செடிகள் குறித்து பயிற்சி அளிப்பர்.
புதன் கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரை மற்றும் 3:30 முதல் மாலை 5:30 மணி வரை இந்த பூங்காவுக்கு செல்லலாம். பெரியவர்களுக்கு 25 ரூபாய் கட்டணம்; சிறியவர்களுக்கு அனுமதி இலவசம்.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள், மைசூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, கேப்பில் செல்லலாம். ரயிலில் செல்பவர்கள், மைசூரு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள், மைசூரு பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம்.
- நமது நிருபர் -