கத்தியை காட்டி மிரட்டி கும்பல் துணிகரம்; கைது செய்த இருவரிடம் தீவிர விசாரணை
கத்தியை காட்டி மிரட்டி கும்பல் துணிகரம்; கைது செய்த இருவரிடம் தீவிர விசாரணை
ADDED : ஜூலை 25, 2024 10:50 PM

பாலக்காடு : பாலக்காடு அருகே, கார், ஜீப் மற்றும் பைக்கில் வந்த கும்பல், கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி, ரூ.15 லட்சம் மதிப்புள்ள கால்நடைகளை அபகரித்த சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், தேசிய நெடுஞ்சாலை வடக்கஞ்சேரியில் நேற்று அதிகாலை, ஆந்திராவில் இருந்து கோட்டயம் மாவட்டத்திற்கு கால்நடைகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்திய, 13 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி மிரட்டி டிரைவர் உட்பட லாரியில் இருந்த மூவரை மற்றொரு வாகனத்தில் ஏற்றினர். அதன்பின், கன்டெய்னர் லாரியை எடுத்து சென்றனர்.வேங்கச்சேரியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், கன்டெய்னர் லாரியில் இருந்த 50 எருமைகள் மற்றும் 27 காளைகளை இறக்கிய பின், லாரியை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு, காரில் ஏற்றி சென்ற லாரி ஊழியர்களின் மொபைல்போனை பறித்து கொண்டு, இறக்கிவிட்டு கும்பல் தப்பி சென்றது. இதை தொடர்ந்து, லாரி ஊழியர்கள் வடக்கஞ்சேரி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தனர். எஸ்.ஐ., ஜிஷ்மோன் தலைமையான சிறப்பு படையினர் விசாரித்தனர். அபகரித்த கால்நடைகள் மற்றும் லாரி இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. கொள்ளை கும்பலில் இருந்த, கிழக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த ஷமீர், 35, ஷஜீர், 31, ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பி சென்ற மற்றவர்களை போலீசார் தேடுகின்றனர். கைது செய்த இருவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். எஸ்.ஐ., ஜிஷ்மோன் கூறியதாவது: விசாரணையில், ரூ.15 லட்சம் மதிப்புள்ள கால்நடைகளை அபகரித்து, அவற்றை இறைச்சிக்கு விற்பனை செய்யும், ஷமீர், ஷஜீர் தலைமையிலான கும்பல் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், கும்பலை சேர்ந்த மற்ற நபர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் தேடுகிறோம்.
அதே நேரத்தில், லாரியில் கொண்டு வந்த கால்நடைகளுக்கு போதிய ஆவணங்கள் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு, அவர் கூறினார்.

