கோலார் காங்., தலைவர்கள் டில்லியில் முகாம் கோஷ்டி கானத்தால் குழப்பத்தில் மேலிடம்
கோலார் காங்., தலைவர்கள் டில்லியில் முகாம் கோஷ்டி கானத்தால் குழப்பத்தில் மேலிடம்
ADDED : மார் 22, 2024 05:55 AM
கோலார் லோக்சபா தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளர் யார் என்பதில் இன்னும் சிக்கல் தீரவில்லை. கோலாரின் காங்கிரஸ் தலைவர்கள், இரு அணியாக டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
அங்குள்ள காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் வீட்டில், நேற்று முன்தினம் மாலை, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில் அமைச்சர் கே.ஹெச்.முனியப்பாவின் எதிர்ப்பாளர்களான முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார், எம்.எல்.ஏ.,க்கள் கோலார் கொத்துார் மஞ்சுநாத், பங்கார்பேட்டை எஸ்.என்.நாராயணசாமி, மாலுார் நஞ்சேகவுடா, எம்.எல்.சி., அனில் குமார், முல்பாகல் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஆதி நாராயணா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
வலது பிரிவு
இம்முறை எஸ்.சி., பிரிவில் வலது பிரிவினருக்கு தான் 'சீட்' வழங்க வேண்டும் என்று தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திற்கு சென்றனர். அங்கும், எஸ்.சி., வலது பிரிவுக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்றனர்.
இதை ஏற்க, மல்லிகார்ஜுன கார்கே மறுத்து விட்டார். சமூக நீதி அடிப்படையில் கோலார் தொகுதி எஸ்.சி., இடது பிரிவுக்கு தான் வழங்கப்படும் என்றார்.
இதை ஏற்றுக் கொண்ட அதிருப்தியாளர்கள், 'முனியப்பாவுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ கொடுக்காமல் வேறொருவருக்கு கொடுக்க வேண்டும்' என்று முரண்டு பிடித்தனர்.
அதே பிரிவில் உள்ள முன்னாள் ராஜ்யசபா எம்.பி., ஹனுமந்தப்பாவுக்கு சீட் வழங்க கோரினர். இது பற்றி வேட்பாளர் தேர்வுக்குழுவில் தெரிவிக்கப்படும் என்று கூறி அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ., ரூபகலா
இந்நிலையில், தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலா டில்லியில் இருந்தும், அதிருப்தியாளர் கோஷ்டியுடன் சேரவில்லை.
இதன்பின்னர், முனியப்பா அணியில் உள்ள, கோலார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் லட்சுமி நாராயணா, செயல் தலைவர் ஊருபாகிலு சீனிவாஸ், கோலார் நகர காங்கிரஸ் தலைவர் பிரசாத் பாபு, கிராம பகுதி தலைவர் உதயகுமார், மாலுாரின் மதுசூதனன், முல்பாகலின் ராம் பிரசாத், வெங்கட ராமகவுடா ஆகியோர் ஒரு குழுவாக, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரை சந்தித்து, முனியப்பாவின் இரண்டாவது மகள் நந்தினியின் கணவர் சிக்கதொட்டண்ணா என்பவருக்கு தான் சீட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இவர்களை தொடர்ந்து, டில்லியில் உள்ள காங்கிரஸ் முக்கிய தலைவர்களை, முனியப்பா தலைமையில் சென்று சந்தித்து இதே கோரிக்கையை வைத்தனர். மறுபடியும் 2019 தேர்தலின் முடிவை தான் எதிர்ப்பார்க்க வேண்டுமா எனவும் தொடர்ந்து முரண்டு பிடித்தனர்.
இதனால், கோலார் தொகுதியை யாருக்கு வழங்குவது என்பதில் மேலிடத் தலைவர்கள் குழம்பி தவிக்கின்றனர்
.- நமது நிருபர் -

