கோல்கட்டா சம்பவம்; மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
கோல்கட்டா சம்பவம்; மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
UPDATED : செப் 09, 2024 01:58 PM
ADDED : செப் 09, 2024 01:54 PM

புதுடில்லி: வழக்கமான நடைமுறைகளை எதுவும் பின்பற்றாமல், கோல்கட்டா டாக்டரின் உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என்று மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி., கர் மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த இளம்பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் மருத்துவர்கள் தற்போதும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அறிக்கை
இந்த கொலை விவகாரத்தில் மேற்கு வங்க அரசு மெத்தனமாக செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த சூழலில், இது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், பெண் டாக்டர் கொலை வழக்கில் சி.பி.ஐ., தரப்பில் இன்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
சரமாரி கேள்வி
அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நேரம், அவரது உடலை பெற்றோரை பார்க்க விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையை படித்து பார்த்த தலைமை நீதிபதி சந்திரசூட், மேற்கு வங்க அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஏன்?
வழக்கமான நடைமுறைகளை எதுவும் பின்பற்றாமல், உடலை பிரேத பரிசோதனை செய்தது ஏன்? என்று மேற்கு வங்க அரசுக்கு கேள்வி எழுப்பினர். அதாவது, பிரேத பரிசோதனை செய்வதற்கான ஆவணமே இல்லாமல், உடற்கூராய்வுக்கு உடலை ஒப்படைத்தது ஏன் என்றும், பெண் டாக்டர் உயிரிழந்த நேரம் குறித்து தெளிவான தகவலை கொடுக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி சந்திர சூட் கேட்டுக் கொண்டார்.
அலட்சியம்
மேலும், சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் துஷார் மேக்தா, தடயவியல் பரிசோதனையில் ஆதாரங்களை சேகரித்ததில் அதிருப்தி தெரிவித்ததுடன், இதன் மாதிரிகளை டில்லி எய்ம்ஸ்க்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல், ரத்த மாதிரிகளை 4 டிகிரி செல்சியஸில் பாதுகாத்து வைக்கவில்லை என்றும், இதுபோன்று ஆதாரங்களை கையாள்வதில் அலட்சியம் காட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
உத்தரவு
சி.பி.ஐ.,யின் இந்த குற்றச்சாட்டுக்களால் மேற்கு வங்க அரசு மீது தலைமை நீதிபதி அதிருப்தியடைந்துள்ளார். இந்த வழக்கில் புதிய அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டனர்.