கே.ஆர்., மார்க்கெட் - பெல்லந்துார் நீர் வழித்தடம் விரைவில் நிறைவு
கே.ஆர்., மார்க்கெட் - பெல்லந்துார் நீர் வழித்தடம் விரைவில் நிறைவு
ADDED : செப் 14, 2024 11:42 PM

பெங்களூரு : 'கே - 100' என்ற நீர் வழித்தட திட்ட பணிகள் விரைவில் முடியும் தருவாயில் இருப்பதாக, பெங்களூரு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெங்களூரில் பிரதான மழைக் கால்வாய்களை, நீர் வழித்தடமாக மாற்றும் 'கே - 100' என்ற திட்டம், 2021 மார்ச்சில் துவக்கப்பட்டது. கால்வாய்களை சுத்தப்படுத்தி, மாசு கட்டுப்படுத்தி, பொருளாதார மேம்படுத்துவது இத்திட்டத்தின் நோக்கம்.
ரூ.175 கோடி
இத்திட்டத்தின் கீழ், கோரமங்களா மழைநீர்க் கால்வாயில், கே.ஆர்., மார்க்கெட்டில் இருந்து, பெல்லந்துார் வரையில் 9.2 கி.மீ., துாரத்துக்கு நீர் வழித்தடம் அமைப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த செலவு 175 கோடி ரூபாய்.
பெங்களூரு மாநகராட்சியின் இத்திட்டம், 2021 டிசம்பருக்குள் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை பணிகள் முடிக்கவில்லை.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:
நீர் வழித்தடம் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதற்கு முன்பு, 120 எம்.எல்.டி., கழிவுநீர், பாய்ந்து கொண்டிருந்தது. அதை தடுக்கும் பணிகள் மேற்கொண்டதால், 8 எம்.எல்.டி.,யாக குறைந்துள்ளது. விரைவில் கழிவுநீர் பாயாமல் முழுதும் தடுக்கப்படும்.
கும்பாரகுந்தி பகுதியில், 5 எம்.எல்.டி., கழிவுநீர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, நீர் வழித்தடத்தில் பாய்ச்சப்படுகிறது.
மலர் மரக்கன்றுகள்
'கே - 100' திட்டப் பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. கழிவுநீர் சரளமாக செல்லும் வகையில், ஆங்காங்கே கான்கிரீட் வளையங்கள் அமைத்து, மலர் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு விஞ்ஞானத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவியல் பூங்கா அமைக்கப்படுகிறது. நீர் வழித்தடத்தின் மேல் பகுதியில், இரண்டு வழித்தடத்திலும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளன.
மின்சார இணைப்புக்காக, அதி நவீன மின்மாற்றிகள் பொருத்தப்பட்டுள்ளன. வழித்தடத்தின் சர்வீஸ் சாலைகள் மூலம், மழைநீரை குழாய்கள் மூலம், நீர் வழித்தடத்துக்குச் செல்லும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கழிவுநீர் வருவதை தடுப்பதற்காக, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், 15 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.