கே.ஆர். மருத்துவமனையில் அவதிப்படும் பயிற்சி டாக்டர்கள்
கே.ஆர். மருத்துவமனையில் அவதிப்படும் பயிற்சி டாக்டர்கள்
ADDED : ஆக 18, 2024 11:33 PM

மைசூரு : 'கே.ஆர்., மருத்துவமனையில் பணியில் உள்ள டாக்டர்களுக்கு ஓய்வெடுக்க போதுமான அறைகள் இல்லை. மருத்துவமனையை சுற்றிலும் மின் விளக்கு வசதி இல்லை. சுத்தமான குடிநீர் தேவை' என பயிற்சி டாக்டர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மூதாட்டி
மைசூரு மாவட்ட கே.ஆர். மருத்துவமனைக்கு, தினமும் பல மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சை பெற பலரும் வந்து செல்கின்றனர்.
சமீபத்தில் இம்மருத்துவமனையில் போதிய சக்கர நாற்காலி இல்லாத காரணத்தால், மூதாட்டியை பிளாஸ்டிக் நாற்காலியில் அமர வைத்து துாக்கி சென்ற படங்கள், சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து, மருத்துவமனையின் ஒவ்வொரு அவலமாக வெளிச்சத்துக்கு வர துவங்கி உள்ளன.
பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது:
அவசர காலத்தில் 36 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். ஆனால், இங்கு பணியில் இருக்கும் எங்களுக்கு சரியான அறையின்றி, சிலர் காரில் ஓய்வெடுக்கின்றனர். சில அறைகளில் எலிகள் கும்மாளமிடுகின்றன.
டாக்டர்கள், பொது கழிப்பறைகளை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளன. மருத்துவமனை வளாகத்தில் வெறிச்சோடிய பகுதிகளில் மின்விளக்கு அமைப்பு இல்லை.
இதனால் இரவு நேர பணியாளர்கள், அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி நிலை உள்ளது
ரத்த வங்கி மற்றும் வார்டுகளுக்கு செல்லும் வழியில் சரியான மின் விளக்கு வசதி இல்லை. ஒரு உதவி மருத்துவர் இரவோடு இரவாக ரத்த வங்கிக்கு ரத்தம் எடுக்க அனுப்பப்படுகிறார். அந்த சாலையில் குடிகாரர்களும், புகை பிடிப்பவர்களும் உள்ளனர்.
பெண் மருத்துவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு. சமீபத்தில் இளம் பெண் ஒருவரை, மது போதையில் இருந்த நபர், கையை பிடித்து இழுத்த சம்பவமும் நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை
மருத்துவமனை டீன் டாக்டர் தாட்சாயினி கூறியதாவது:
பயிற்சி டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினேன். பெண் மருத்துவர்கள் அச்சமின்றி வெளியே செல்ல, மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் பொருத்த, உயர் அதிகாரிகளுக்கு கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
டாக்டர்களின் அறைகள், கழிப்பறையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பூட்டப்பட்ட அறைகள், ஜூனியர் டாக்டர்களுக்கு ஒதுக்கப்படும். தற்போது, பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
� கழிப்பறையின் சுவற்றில் வளர்ந்துள்ள வேர்கள்.� மருத்துவமனை வளாகத்தில் மின் விளக்குகள் இல்லாமல் இருட்டில் நடந்து வர வேண்டி உள்ளது. இடம்: மைசூரு.

