நடிகர் தர்ஷனை கைது செய்த போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு நடிகர் தர்ஷனை கைது செய்ததற்காக பெங்., போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு
நடிகர் தர்ஷனை கைது செய்த போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு நடிகர் தர்ஷனை கைது செய்ததற்காக பெங்., போலீஸ் கமிஷனருக்கு பாராட்டு
ADDED : ஜூலை 29, 2024 04:56 AM
பெங்களூரு, : நடிகர் தர்ஷனை கைது செய்ததற்காக பெங்களூரு போலீஸ் கமிஷனரை, பொதுமக்கள் பாராட்டினர்.
பெங்களூரு கிழக்கு போலீஸ் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுடன், பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று கூட்டம் நடத்தினார்.
பானஸ்வாடியில் நடந்த கூட்டத்தில், முரளி என்பவர் பேசுகையில், ''கமிஷனர் சார், முதலில் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கொலை வழக்கில் தர்ஷன் கைது செய்யப்பட்ட போது, அரசியல் பின்புலத்தை வைத்து வெளியே வந்து விடுவார் என்று பேச்சு அடிபட்டது. ஆனால் அது போன்று நடக்கவில்லை.
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை, தர்ஷன் கைது மூலம் நிரூபித்து உள்ளீர்கள்,'' என்றார். அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும், கைதட்டி கமிஷனர் தயானந்தா எடுத்த, நடவடிக்கையை பாராட்டினர்.
நோட்டீஸ்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்த, சித்தாரோடா என்ற கைதி, சிறையில் நடிகர் தர்ஷனை சந்தித்து பேசினேன்.
ரேணுகாசாமியை கொலை செய்தது நினைத்து வருந்தினார். மனைவி, பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்று, எனக்கு அறிவுரை வழங்கினார். எனக்கு யோகா செய்ய சொல்லி கொடுத்தார் என்று கூறி இருந்தார்.
ஆனால் சித்தாரோடா கூறியதை சிறை அதிகாரிகள் மறுத்து உள்ளனர். தர்ஷனை, சித்தாரோடா சந்திக்கவே இல்லை என்று கூறி உள்ளனர். தர்ஷனை சந்தித்ததாக கூறிய சித்தாரோடாவுக்கு, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார், நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதற்கிடையில் ரேணுகாசாமி கொலையில் சிறையில் உள்ள பவன் உள்ளிட்டோர், தர்ஷனிடம் சென்று, மன்னித்து விடுங்கள் பாஸ்.... எங்களால் தான் உங்களுக்கு இந்த நிலை என்று வருத்தத்துடன் கூறி உள்ளனர். வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என, தர்ஷன் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.