ரயில் விபத்தை தடுத்து பயணியரை காப்பாற்றிய டிராக் மேனுக்கு பாராட்டு
ரயில் விபத்தை தடுத்து பயணியரை காப்பாற்றிய டிராக் மேனுக்கு பாராட்டு
ADDED : செப் 08, 2024 06:52 AM
உத்தரகன்னடா: சாமர்த்தியமாக செயல்பட்டு, நுாற்றுக்கணக்கான பயணியரை காப்பாற்றிய டிராக்மேனுக்கு, பாராட்டு குவிந்தது.
கொங்கண ரயில்வேயின், குமட்டா - ஹொன்னாவரா இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதை அதிகாலை 4:50 மணியளவில் டிராக் மேன் மஹதேவா கவனித்தார்.
இந்த வழித்தடத்தில், திருவனந்தபுரம் - டில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் வரவிருந்தது. எனவே குமட்டா ரயில் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அந்த ரயிலை நிறுத்தும்படி கூறினார்.
அதற்குள் ரயில், குமட்டா ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பிவிட்டது. அதன்பின் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட்டை தொடர்பு கொள்ள முயற்சித்தார். இணைப்பு கிடைக்கவில்லை.
எட்டு நிமிடங்களில், விரிசல் பகுதிக்கு ரயில் வந்துவிடும். எனவே சிறிதும் தாமதிக்காத மஹதேவா, தண்டவாளம் மீதே 500 மீட்டர் தொலைவு ஓடி, ரயிலை நிறுத்தும்படி சிக்னல் காண்பித்து, ரயிலை நிறுத்தினார். இதனால் நேரவிருந்த அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான பயணியர் காப்பாற்றப்பட்டனர்.
ரயில்வே ஊழியர்கள், விரிசல் பகுதியில் வெல்டிங் செய்த பின், ரயில் பயணத்தை தொடர்ந்தது.
அபாயமான நேரத்தில் புத்திசாலித்தனமாக நடந்து கொண்ட, மஹதேவாவை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
கொங்கண ரயில்வே சீனியர் பொறியாளர் நாடிகே, மஹதேவை கவுரவித்தார்.