ரூ.146 கோடி வருவாய் ஈட்டி சாதனை குக்கே சுப்ரமண்யர் கோவில் முதலிடம்
ரூ.146 கோடி வருவாய் ஈட்டி சாதனை குக்கே சுப்ரமண்யர் கோவில் முதலிடம்
ADDED : ஏப் 08, 2024 04:57 AM

தட்சிண கன்னடா: பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோவில், 2023 - 24ம் நிதியாண்டில் 146.01 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, 13வது ஆண்டாக, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தட்சிணகன்னடா சுள்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யர் வரலாற்று மகத்துவம் பெற்ற கோவிலாகும். ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்டது. பிரசித்தி பெற்ற பரிகார தலமாக விளங்குகிறது. குறிப்பாக நாகதோஷம் உள்ளவர்கள், இங்கு வந்து நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.
உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் வருவாய் ஆண்டுக்கு, ஆண்டு அதிகரிக்கிறது. வருவாய் அடிப்படையில், கர்நாடகா கோவில்களில் முதல் இடத்தை, 13 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது.
இந்த கோவிலுக்கு, காணிக்கை, பரிகார சேவைகள், பிரசாத விற்பனை, கட்டட வாடகை, தோட்ட உற்பத்தி பொருட்கள் விற்பனை என, பல வழிகளில் வருவாய் வருகிறது. 2023 - 24ம் நிதியாண்டில், 146.01 கோடி ரூபாய் வருவாய் பெற்றதன் மூலம், மாநிலத்தின் பணக்கார கோவில் என்ற பெருமையை தக்க வைத்துள்ளது.
ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட கொல்லுார் மூகாம்பிகை கோவில் 68.23 கோடி ரூபாய், நஞ்சன்கூடு ஸ்ரீ கண்டேஸ்வரர் கோவில் 30.73 கோடி ரூபாய், சவதத்தி எல்லம்மா கோவில் 25.80 கோடி ரூபாய்.
மந்தார்தி துர்கா பரமேஸ்வரி கோவில் 15 கோடி ரூபாய், கொப்பாலின், ஹுலிகெம்மா தேவி கோவில் 16.29 கோடி ரூபாய், காட்டி சுப்ரமண்ய சுவாமி கோவில் 13.65 கோடி ரூபாய், பெங்களூரின் பனசங்கரி கோவில் 11.37 கோடி ரூபாய் வருவாய் ஈட்டிஉள்ளன.

