பாதயாத்திரையில் பங்கேற்க பா.ஜ.,வுக்கு குமாரசாமி நிபந்தனை
பாதயாத்திரையில் பங்கேற்க பா.ஜ.,வுக்கு குமாரசாமி நிபந்தனை
ADDED : ஆக 02, 2024 12:30 AM

பெங்களூரு: கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை பா.ஜ., நடத்தும் பாதயாத்திரையில் பங்கேற்க, மத்திய அமைச்சர் குமாரசாமி சம்மதித்துள்ளார்.
அதே நேரம், பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவை ஒதுக்கி வைக்க வேண்டும் என, பா.ஜ.,விடம் நிபந்தனை விதித்து உள்ளார்.
பென்டிரைவ் வெளியீடு
கர்நாடகா மாநிலம் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் நடந்த முறைகேடுக்கு பொறுப்பேற்று கர்நாடக காங்., முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வலியுறுத்தி, பெங்களூரில் இருந்து மைசூருக்கு பா.ஜ., நாளை பாதயாத்திரை துவங்க உள்ளது.
இதில், பங்கேற்க மாட்டோம் என, கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வை சேர்ந்த, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தார்.
'ஹாசனில் எங்கள் குடும்பத்துக்கு எதிராக செயல்படும் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவுடன் நாங்கள் கைகோர்த்து செயல்பட முடியாது. பாத யாத்திரைக்கான ஏற்பாடுகளில் பிரீத்தம் கவுடா முக்கிய பங்கு வகிப்பதை ஏற்க முடியாது' எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த பிரீத்தம் கவுடா தான், குமாரசாமியின் அண்ணன் மகன் பிரஜ்வலின் ஆபாச வீடியோ பென் டிரைவ்களை வெளியிட்டவர்.
சம்மதம்
இந்நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, பா.ஜ., மாநில பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ், மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஆகியோர், நேற்று மாலை டில்லியில் குமாரசாமியை சந்தித்து சமரசச் பேச்சு நடத்தினர்.
இதில், பாதயாத்திரையில் பங்கேற்க குமாரசாமி சம்மதித்துள்ளார்.
ஆனால், 'பாதயாத்திரையில் பிரீத்தம் கவுடா கலந்து கொள்ளக் கூடாது' என, அவர் நிபந்தனை விதித்துள்ளார். அதை, பா.ஜ., தலைவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து, டில்லியில் விஜயேந்திரா கூறுகையில், ''நாளை காலை 8:30 மணிக்கு பெங்களூரில் இருந்து, மைசூருக்கு பாத யாத்திரையை துவக்குவோம்.
''மத்திய அமைச்சர் குமாரசாமியே, பாதயாத்திரையை துவக்கி வைப்பார். சிறு, சிறு குழப்பங்களை சரி செய்து கொண்டோம். நிர்ணயித்தபடி பாதயாத்திரை நடத்துவோம்,'' என்றார்.
இதற்கிடையில், ''பா.ஜ., - ம.ஜ.த.,வினர் பாதயாத்திரை நடத்தும் பகுதிகளில், பா.ஜ.,வின் கடந்த கால முறைகேடுகளை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்,'' என மாநில காங்., தலைவரான துணை முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார்.