ADDED : ஜூலை 08, 2024 06:37 AM

ஜெ.பி., நகர்: சென்னப்பட்டணா இடைத்தேர்தல் தொடர்பாக, தொகுதி தலைவர்கள், தொண்டர்களுடன் மத்தி கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.
லோக்சபா தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குமாரசாமி, மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பதவி ஏற்றார். இவரால் காலியான ராம்நகரின், சென்னப்பட்டணா தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். தொகுதியை தக்க வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
ஆனால் தொகுதியை தட்டிப்பறித்து, குமாரசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் உறுதி பூண்டுள்ளார். இதற்காகவே அவ்வப்போது, சென்னப்பட்டணாவுக்கு செல்கிறார். 'நான் உங்கள் வீட்டு பிள்ளை' என உருக்கமாக பேசி மக்களை கவர முயற்சிக்கிறார்.
இந்நிலையில், பெங்களூரு ஜெ.பி., நகரில் தன் இல்லத்தில், சென்னப்பட்டணா தொகுதி தலைவர்கள், தொண்டர்களுடன், நேற்று மதியம் குமாரசாமி ஆலோசனை நடத்தி கருத்து கேட்டறிந்தார்.
'சென்னப்பட்டணா தொகுதியில், யார் போட்டியிட்டாலும், அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தான். இதில் யாருக்கும் எந்த குழப்பமும் வேண்டாம். அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தலை சந்திக்கலாம். கூட்டணி வேட்பாளரின் வெற்றியே, நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்' என குமாரசாமி அறிவுறுத்தினார்.
உடன், அவரது மகன் நிகில் குமாரசாமிஇருந்தார்.