ADDED : ஆக 30, 2024 09:56 PM

ஹூப்பள்ளி: 'சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடுவேன்' எனக் கூறிய, அக்கட்சி எம்.எல்.சி., யோகேஸ்வர் மீது, மத்திய அமைச்சர் குமாரசாமி அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார்.
ராஜினாமா
மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி ராஜினாமா செய்ததால், காலியான சென்னப்பட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு பா.ஜ., வேட்பாளராக போட்டியிட, அக்கட்சி எம்.எல்.சி., யோகேஸ்வர் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மத்திய அமைச்சர் குமாரசாமி, தன் கட்சி சார்பில், வேட்பாளரை களம் இறக்க நினைக்கிறார்.
ம.ஜ.த., சின்னத்தில் போட்டியிடவும், யோகேஸ்வருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்தார். 'போட்டியிட்டால் பா.ஜ., சின்னத்தில் தான்; இல்லாவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவேன்' என, அவர் பகிரங்கமாக கூறினார்.
யோகேஸ்வருக்கு ஆதரவாக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உள்ளிட்ட சில தலைவர்கள் பேசுகின்றனர்.
இந்நிலையில் சென்னப்பட்டணா இடைத்தேர்தல் தொடர்பாக, மத்திய புதுப்பித்தக்க எரிசக்தி துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியின் ஹூப்பள்ளி இல்லத்தில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. குமாரசாமியும் கலந்து கொண்டார்.
இடைத்தேர்தல்
இந்த கூட்டத்தில், 'சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக யோகேஸ்வர் கூறியது சரியல்ல' என, தன் அதிருப்தியை குமாரசாமி வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.