ADDED : ஆக 07, 2024 05:55 AM

மத்திய அமைச்சர் குமாரசாமி, தன் மகன் நிகிலை அரசியல் வாரிசாக்குவதில் ஆர்வம் காண்பிக்கிறார். ம.ஜ.த.,வை முன்னடத்தி செல்ல தகுதி பெற்றவராக, மகனை தயாராக்குகிறார். பா.ஜ., மற்றும் ம.ஜ.த., இணைந்து நடத்தும் பாதயாத்திரையில், நிகிலும் முன்னணியில் நிற்கிறார்.
கர்நாடகாவில் தான் உருவாக்கிய ம.ஜ.த.,வை காப்பாற்ற, கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடா போராடுகிறார். கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் பலம் குறைந்து வருகிறது. 2023 சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 28லிருந்து 19 ஆக சரிந்தது. கட்சி இனி மேலே எழாது. கரைந்து காணாமல் போனதாக காங்கிரஸ் தலைவர்கள் கிண்டல் செய்தனர்.
பல மாதங்கள்
சட்டசபை தேர்தலில் பலத்த அடி வாங்கிய பா.ஜ., தோல்வியில் இருந்து மீள, பல மாதங்களாகின. ஆனால், வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், ம.ஜ.த., மனம் தளராமல் லோக்சபா தேர்தலுக்கு தயாரானது. சட்டசபை தேர்தலை போன்று, லோக்சபா தேர்தலிலும், அதிகமான ஓட்டுகளை அறுவடை செய்யலாம் என, காங்கிரஸ் நம்பியது. இந்த நம்பிக்கை பொய்த்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வைத்தன.
மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட ம.ஜ.த., இரண்டில் வெற்றி பெற்றது. மாண்டியாவில் வெற்றி பெற்ற குமாரசாமி, பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில், கனரக தொழில் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.
இவர் தேசிய அரசியலுக்கு சென்றதால், கர்நாடகாவில் ம.ஜ.த.,வுக்கு தலைமை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல், ஹாசன் லோக்சபா எம்.பி.,யான பின், இவரே வருங்காலத்தில் தேவகவுடாவின் அரசியல் வாரிசாவார் என, தலைவர்கள், தொண்டர்கள் எதிர்பார்த்தனர். இவ்விஷயத்தில் ரேவண்ணாவும், அவரது மனைவி பவானியும் அதிக ஆர்வம் காண்பித்தனர்.
குமாரசாமியின் மகன் நிகில், நடிகராகவும் இருந்ததால் இவருக்கு பதிலாக, தன் மூத்த பேரன் பிரஜ்வல், அரசியல் வாரிசாவார் என, தேவகவுடா எதிர்பார்த்தார்.
ஆனால், இம்முறை லோக்சபா தேர்தலின் போது, பெண்களை பிரஜ்வல் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்கள் வெளியாகின.
வார கணக்கில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த இவர், தேவகவுடா, குமாரசாமி உத்தரவுக்கு பணிந்து பெங்களூரு திரும்பி, போலீசாரிடம் சரண் அடைந்தார்.
பென் டிரைவ் வீடியோ தொடர்பான ஆதாரங்களை, அழிக்கும் நோக்கில் பணிப்பெண்ணை கடத்திய வழக்கில், ரேவண்ணாவும், அவரது மனைவியும் போலீசாரிடம் சிக்கினர்.
தற்போது தம்பதி ஜாமினில் உள்ளனர். இவர்களின் மற்றொரு மகன் சூரஜும், கட்சி தொண்டரை பண்ணை வீட்டுக்கு வரவழைத்து பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் அடைபட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.
தேசிய அரசியல்
ரேவண்ணா குடும்பத்தினர், பழையபடி கட்சி பணிகளில் ஈடுபட தற்போதைக்கு சாத்தியம் இல்லை. குமாரசாமியும் எம்.பி.,யாக தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார்.
இவர் பணி நிமித்தமாக, அதிக நாட்கள் டில்லியில் இருக்க வேண்டி வரும். எனவே தனக்கு பதிலாக, மகன் நிகிலை தலைவராக உருவாக்குவதில், ஆர்வம் காண்பிக்கிறார்.
ஒக்கலிகர் செல்வாக்கு மிகுந்த பழைய மைசூரு பகுதியில், இவரை தேவகவுடா குடும்பத்தின் வாரிசாக்கவும், குமாரசாமி திட்டம் வகுத்துள்ளார்.
இதை மனதில் கொண்டு, கூட்டணி கட்சிகள் நடத்தும் பாதயாத்திரையில், மகனை முன் நிறுத்துகிறார்.
தன்னால் செல்ல முடியாத இடங்களில், பாதயாத்திரையில் பங்கேற்க மகனை அனுப்புகிறார். நிகிலும் நடிப்புக்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியல்வாதியாக மாறியுள்ளார்.
தொண்டர்களை, கட்சியை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார். தந்தையை போன்றே, காங்கிரஸ் தலைவர்களை விமர்சிக்கிறார். பா.ஜ., தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறார்.
- நமது நிருபர் -