குமாரசாமி பாதையில் பிள்ளைகள்: காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
குமாரசாமி பாதையில் பிள்ளைகள்: காங்., - எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
ADDED : மே 10, 2024 05:21 AM

துமகூரு : ''முன்னாள் முதல்வர் குமாரசாமி, நாடகமாடுவதை நிறுத்த வேண்டும்,'' என குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் குற்றம் சாட்டினார்.
துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் குமாரசாமி எந்த விதத்தில், நல்ல நபர். பிரஜ்வல் ரேவண்ணாவின் பென் டிரைவ் வழக்கில், துணை முதல்வர் சிவகுமாரின் பங்களிப்பு இருப்பதாக, பொய்யான குற்றச்சாட்டை சுமத்துகிறார். குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க, நாடகம் ஆடுகிறார்.
ஆறு மாதங்களுக்கு முன்பே தேவகவுடா, குமாரசாமியை, அமித்ஷாவிடம் அனுப்பியதாக, தேவராஜே கவுடா கூறியுள்ளார். இப்போது இதே நபர், சிவகுமாரின் பெயரை கூறுகிறார். வழக்கை திசை திருப்ப குமாரசாமி நடத்தும் நாடகம் இது. இதை விட்டு விட்டு, நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்.
இவருக்கு மானம், மரியாதை இருந்தால், பிரஜ்வல் செய்த செயலை கண்டித்து, கட்சியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். ஒருமுறை பிரஜ்வல், தனக்கு மகன் என்கிறார். மற்றொரு முறை ரேவண்ணா குடும்பத்துக்கும், தன் குடும்பத்துக்கும் தொடர்பில்லை என்கிறார்.
ஹாசன் என்றால் ரேவண்ணா, ரேவண்ணா என்றால் ஹாசன் என கூறி திரிகின்றனர். குற்றச்சாட்டு வந்தவுடன் ரேவண்ணா, தேவகவுடா குடும்பத்தில் இருந்து வெளியே சென்று விட்டாரா. மாநில மக்கள் அவ்வளவு முட்டாள்களா. யார் வீடியோவை வெளியிட்டனரோ, அவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
எங்கள் சமுதாயத்தில், யாரும் வளரக்கூடாது என, அனைத்து தலைவர்களையும் மிதிக்கின்றனர். இவர்களின் பாவ குடம் நிரம்பியுள்ளது, பிரஜ்வல் வழக்கின் மூலம், இவர்களின் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
குமாரசாமி, தன் மகளின் வயதில் உள்ள பெண்ணை, திருமணம் செய்து கொண்டார். குழந்தை பிறந்த பின், அந்த பெண்ணை கை விட்டுவிட்டார். குமாரசாமி நடந்த பாதையில், பிள்ளைகளும் நடக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேசுவது சரியல்ல
காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவலிங்கேகவுடா ஹாசனில் நேற்று கூறியதாவது:
கடந்த நான்கைந்து மாதங்களாக பென் டிரைவ் விஷயம் பேசப்படுகிறது. இவற்றை பகிரங்கப்படுத்த கூடாது என, நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றதால், பென் டிரைவ் வெளிச்சத்துக்கு வரவில்லை.
ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ, ரேவண்ணா கைது வழக்கு தொடர்பாக, குமாரசாமி மனம் போனபடி விமர்சிக்கிறார். இவர் பேசும் போது, நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். அரசில் உயர் பதவியில் இருப்பவர்களை பற்றி, அவமதிப்பாக பேசுவது சரியல்ல.
பென் டிரைவ் வெளிச்சத்துக்கு வந்ததால், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள், அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விஷயத்துக்கு, அரசு எப்படி காரணமாகும். முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா மற்றும் வக்கீல் தேவராஜே கவுடா தினமும் ஊடகத்தினர் சந்திப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன.
இவ்வாறு அவர் கூறினார்.