குமாரசாமி பகல் கனவு: அமைச்சர் எம்.பி.பாட்டீல் கிண்டல்
குமாரசாமி பகல் கனவு: அமைச்சர் எம்.பி.பாட்டீல் கிண்டல்
ADDED : மே 11, 2024 09:32 PM

பெங்களூரு: 'காங்கிரஸ் அரசு கவிழுமென, முன்னாள் முதல்வர் குமாரசாமி பகல் கனவு காண்கிறார்,'' என, தொழிற்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:
மாநில அரசின் வாக்குறுதித் திட்டங்கள், வாக்காளர்களின் மனதை கவர்ந்துள்ளன. முடிவு வெளியான பின், ம.ஜ.த.,வின் நிலை என்னவாகும் என்பதை பார்க்கலாம். அந்த கட்சியின் பலர், காங்கிரசுடன் தொடர்பில் உள்ளனர். பென்டிரைவ் வழக்கு, அவர்களுக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச பென் டிரைவ் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என, கவர்னரிடம் குமாரசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் 'கிளீன்சிட்' பெற்று, பா.ஜ.,விடம் நற்பெயரை சம்பாதிக்க முயற்சிக்கிறார்.
தற்போது, பிரஜ்வல் வழக்கு குறித்து பேச விரும்பவில்லை. எஸ்.ஐ.டி., தன் கடமையை செய்யும். லோக்சபா தேர்தல் முடிந்த பின், மாநில காங்கிரஸ் கவிழுமென, குமாரசாமி பகல் கனவு காண்கிறார். இது பலிக்காது.
எங்கள் அரசை கவிழ்க்க வேண்டுமானால், 60 எம்.எல்.ஏ.,க்கள் வேண்டும். ஆனால் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களே, எங்களுடன் தொடர்பில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.