மாண்டியா தொகுதியில் பிரசாரம் சுமலதா புகாருக்கு குமாரசாமி விளக்கம்
மாண்டியா தொகுதியில் பிரசாரம் சுமலதா புகாருக்கு குமாரசாமி விளக்கம்
ADDED : ஏப் 27, 2024 05:45 AM

மாண்டியா: ''என்னை தேர்தல் பிரசாரத்திற்கு ம.ஜ.த.,வினர் அழைக்கவில்லை,'' என்று, ம.ஜ.த., மீது சுமலதா குற்றச்சாட்டு கூறினார். இதற்கு பதிலடியாக, ''மைசூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் கூட, சுமலதாவிடம் பேசி பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தேன்,'' என்று முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும், மாண்டியா எம்.பி., சுமலதாவுக்கும் இடையேயான மோதல் இன்னும் தீரவில்லை.
மாண்டியா எம்.பி., சுமலதா நேற்று அளித்த பேட்டி:
மாண்டியாவில் குமாரசாமிக்கு, சுமலதா ஆதரவு தரவில்லை என்று, தேவகவுடா கூறி உள்ளார். அவரிடம் இருந்து இந்த வார்த்தையை, நான் எதிர்பார்க்கவில்லை. குமாரசாமி எனது வீட்டிற்கு வந்து, என்னை சந்தித்து பேசினார்.
அதன்பின்னர் ம.ஜ.த., தலைவர்களிடம் இருந்து, பிரசாரத்திற்கு வரும்படி எனக்கு அழைப்பு வரவில்லை. சுமலதா ஆதரவு இல்லாவிட்டாலும் வெற்றி பெறலாம் என்று, அவர்கள் நினைத்து இருக்கலாம்.
தேர்தலில் தோற்றவர் கூட அடுத்த தேர்தலில், 'சீட்' விட்டு தருவது இல்லை. ஆனால் வெற்றி பெற்ற நான், எனது சீட்டை விட்டுக் கொடுத்தேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய வேண்டும்? எனது தியாகத்திற்கு மதிப்பு இல்லை.
மாண்டியாவை நான் விட்டுக் கொடுத்தது, எனது ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடிக்காக தியாகம் செய்கிறேன் என்று கூறி, ஆதரவாளர்களை சமாதானம் செய்தேன். யார் இப்படி செய்வர்?
இவ்வாறு அவர் கூறினார்.
சுமலதா குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து குமாரசாமி கூறியதாவது:
சுமலதா எங்களுக்கு ஆதரவு தரவில்லை என்று, யார் சொன்னார்கள்? தேவகவுடா கூறியது பற்றி எனக்கு தெரியாது. அவருக்கு சரியான தகவல் செல்லாமல் இருந்திருக்கலாம். நான் சுமலதாவை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசினேன். இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? அம்பரிஷ் ஆதரவாளர்கள், எனக்கு ஆதரவாக இருந்தனர்.
மைசூரில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் கூட, சுமலதாவிடம் பேசினேன். என்னை ஆதரித்து பிரசாரம் செய்ய வரும்படி அழைத்தேன். ஆனால் சூழ்நிலையால் அவர் வரவில்லை. மாண்டியாவில் அவர் ஓட்டு போட்டு உள்ளார். எனக்கு தான் ஓட்டு போட்டு இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.

