/
செய்திகள்
/
இந்தியா
/
மாண்டியா விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கடைகளுக்கு தீ வைப்பு; 50க்கும் மேற்பட்டோர் கைது l முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 163 தடை உத்தரவு
/
மாண்டியா விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கடைகளுக்கு தீ வைப்பு; 50க்கும் மேற்பட்டோர் கைது l முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 163 தடை உத்தரவு
மாண்டியா விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கடைகளுக்கு தீ வைப்பு; 50க்கும் மேற்பட்டோர் கைது l முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 163 தடை உத்தரவு
மாண்டியா விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தில் கடைகளுக்கு தீ வைப்பு; 50க்கும் மேற்பட்டோர் கைது l முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 163 தடை உத்தரவு
ADDED : செப் 13, 2024 07:59 AM

மாண்டியா: மாண்டியா, நாகமங்களாவில் விநாயகர் ஊர்வலத்தில் நடந்த கலவரத்தால் பதற்றம் நிலவுகிறது. கடைகள், வாகனங்களுக்கு தீ வைத்த 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 163 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக, காங்கிரஸ் அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மாண்டியா நாகமங்களாவில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஏரியில் கரைக்க நேற்று முன்தினம் இரவு வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.
நாகமங்களாவில் இருந்து மைசூரு செல்லும் சாலையில் உள்ள, பதரிகொப்பலு என்ற இடத்தில் ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதற்கு ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இரு சமூகத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சமரச முயற்சி
அப்போது திடீரென விநாயகர் சிலை ஊர்வலத்தில், மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். சிலர் ஆங்காகே சிதறி ஓடினர். ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த போலீசார், நிலைமை கைமீறி போவதை உணர்ந்தனர். இரு சமூகத்தினரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.
அதற்குள் ஒரு கும்பல் கையில் வாள், அரிவாளை எடுத்து வந்து, நடுரோட்டில் நின்று மிரட்டல் விடுத்தனர். அடுத்த சில வினாடிகளில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் ஒரு துணிக்கடை முற்றிலும் எரிந்து நாசமானது. கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
தகவலறிந்த மாண்டியா எஸ்.பி., மல்லிகார்ஜுன் பாலதண்டி, நாகமங்களா விரைந்தார். போலீஸ் படை குவிக்கப்பட்டது. அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று மதியம் வரை 54 பேரை கைது செய்தனர்.
ஆனால் அப்பாவிகளை கைது செய்து இருப்பதாகவும், அவர்களை விடுவிக்க கோரியும் நேற்று காலை, கைதானவர்களின் உறவினர்கள் நாகமங்களா போலீஸ் நிலையம் முன், போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து எஸ்.பி., கூறுகையில், ''நாகமங்களாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அங்கு அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம். இன்று (நேற்று) 40 சதவீத கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அப்பாவிகளை கைது செய்து இருப்பதாக கூறி, கைதானவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
''கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் கைது செய்து உள்ளோம். அப்பாவிகள் யாராவது இருந்தால், அவர்கள் விடுவிக்கப்படுவர். கலவரம் தொடர்பாக 150 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இதுவரை 52 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மீதம் உள்ளவர்களையும் விரைவில் கைது செய்வோம்,'' என்றார்.
நிலைமை கட்டுக்குள் இருப்பதாக எஸ்.பி., கூறினாலும், நாகமங்களா டவுன், ரூரல் பகுதிகளில் நேற்று பதற்றம் நிலவியது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 163 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, நாகமங்களாவில் முகாமிட்டு, வேறு எதுவும் பிரச்னை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். துணை ராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
கலவரத்தில் ஏழு பைக்குகள், ஒரு கார், ஒரு ஆட்டோ, தள்ளுவண்டிகள் எரிக்கப்பட்டுள்ளன.
என்.ஐ.ஏ.,
நாகமங்களாவில் நடந்த கலவரத்திற்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.
மத்திய கனரக தொழில் அமைச்சரும், மாண்டியா எம்.பி.,யுமான குமாரசாமி கூறுகையில், ''நாகமங்களாவில் நடந்த கலவரம், போலீஸ் துறை தோல்வியை அப்பட்டமாக காட்டுகிறது. முன்பே நடவடிக்கை எடுத்து இருந்தால், பிரச்னை ஏற்பட்டு இருக்குமா.
''பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன. போலீசார் மீது கல்வீசப்படுகிறது. காங்கிரஸ் அரசு என்ன நிர்வாகம் செய்கிறது என்று தெரியவில்லை. நான் முதல்வராக இருந்த போது, கலவரங்கள் நடக்க விடவில்லை, '' என்றார்.
மத்திய சிறு, நடுத்தர தொழில் இணை அமைச்சர் ஷோபா கூறுகையில், ''காங்கிரஸ் அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டை மறைக்க, நாகமங்களாவில் கலவரம் நடந்து உள்ளது. விநாயகர் ஊர்வலத்தில் கற்கள் வீசுவதை பொறுத்து கொள்ள முடியாது.
''இது தற்செயலான சம்பவம் என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறுகிறார். கலவரத்தில் 20க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு உள்ளன. கலவரம் குறித்து என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய உணவு அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ''கர்நாடகாவை பாகிஸ்தானாக மாற்ற, காங்கிரஸ் அரசு திட்டமிட்டு உள்ளது. நாகமங்களாவில் நடந்த கலவரத்தை கண்டிக்கிறேன். குறிப்பிட்ட பகுதி வழியாக, விநாயகர் சிலைகள் செல்ல கூடாது என்று, சட்டம் உள்ளதா.
''மர்ம நபர்கள் கல்வீசியதுடன், கடைகள், வாகனங்களுக்கு தீ வைத்து உள்ளனர். இது தான் நாகரிகமா. ஓட்டு வங்கி கொள்கையை கடைப்பிடிக்காமல், மதவெறி சக்தியை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
அரசு மறுப்பு
ஆனால் நாகமங்களாவில் நடந்தது, கலவரமே இல்லை என்று, அரசு கூறி உள்ளது.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டியில், ''நாகமங்களாவில் கலவரம் நடக்கவில்லை. அங்கு நடந்தது தற்செயலான சம்பவம். இருதரப்பிலும் கல்வீசி உள்ளனர். உயிர்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் தொடர்பாக 54 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம். சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அங்கு சென்று உள்ளார். தேவைப்பட்டால் நானும் செல்வேன்,'' என்றார்.
கடும் நடவடிக்கை
நாகமங்களா கலவரம் குறித்து, முதல்வர் சித்தராமையாவின் 'எக்ஸ்' வலைதள பதிவு:
நாகமங்களாவில் அமைதியை சீர்குலைக்கும் செயல் நடந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மதம் எதுவாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலவரம் தொடர்பாக 50 க்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளனர். யாருடைய துாண்டுதலுக்கும் அடிபணியாமல், அமைதியை கடைப்பிடித்து எங்களுக்கு ஒத்துழைப்பு தரும்படி, நாகமங்களா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.