குமாரசாமி இல்லாததால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள்... சட்டசபையில் ஆளுங்கட்சியை எதிர்கொள்வதில் சிக்கல்
குமாரசாமி இல்லாததால் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள்... சட்டசபையில் ஆளுங்கட்சியை எதிர்கொள்வதில் சிக்கல்
ADDED : ஜூலை 15, 2024 04:43 AM

பெங்களூரு : கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்றுதுவங்குகிறது. ஆனால், தங்களுக்கு கேப்டனாக இருந்த குமாரசாமி, மத்திய அமைச்சராகி டில்லிக்கு சென்று விட்டதால், சட்டசபையில் ஆளுங்கட்சியை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல், ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் கவலையில் உள்ளனர்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், தோல்வி அடைந்த பா.ஜ., சில மாதங்கள் வரை, அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது. ஆறேழு மாதங்கள் எதிர்க்கட்சி தலைவரையே நியமிக்கவில்லை. இது குறித்து, காங்கிரஸ் தலைவர்கள் கிண்டலாக விமர்சித்தனர். அதன்பின் அசோக்கை பா.ஜ., மேலிடம் எதிர்க்கட்சி தலைவராக நியமித்தது.
எதிர்க்கட்சி தலைவர் இல்லாமல், இரண்டு சட்டசபை கூட்டத்தொடர் நடந்தது. எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, ரவி உட்பட ஆளுங்கட்சியை பேச்சால் கட்டிப்போடும் தலைவர்கள், சட்டசபையில் இல்லாமல் பா.ஜ., திணறியது. ஆளுங்கட்சியினர் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இயல்பு நிலை
ஆனால், ம.ஜ.த.,வில் இத்தகைய சூழ்நிலை இருக்கவில்லை. வெறும் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த தோல்வியில் இருந்து, விரைவில் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பியது.
முன்னாள் முதல்வர் குமாரசாமி, ம.ஜ.த.,வுக்கு பக்கபலமாக நின்றிருந்தார். ஆளுங்கட்சியினரை, குறிப்பாக, முதல்வர் சித்தராமையாவை வார்த்தைகளால் வறுத்து எடுத்தார்.
அரசின் பல குளறுபடிகள், வறட்சி பாதிப்பு, மாநிலத்தின் பொருளாதார நெருக்கடி என, ஒவ்வொரு விஷயத்தையும் சட்டசபையில் கேள்வி எழுப்பி, அரசை திணறடித்தார். இவரது தீவிர போராட்டத்தை கண்டு, ஒரு கட்டத்தில் இவரே சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் என, மக்கள் நினைக்க துவங்கினர்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., மற்றும் ம.ஜ.த., கூட்டணி பேச்சு நடந்த போது, குமாரசாமியை எதிர்க்கட்சி தலைவராக பா.ஜ., நியமிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குமாரசாமி மாண்டியாவில் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்றார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் கனரக தொழில் துறை அமைச்சராகி விட்டார்.
அவர் தேசிய அரசியலுக்கு சென்றதால், அவரது இடத்தை அவரது அண்ணன் முன்னாள் அமைச்சர் ரேவண்ணா நிரப்புவார் என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் நினைத்தனர். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணாவின், பாலியல் பலாத்கார வீடியோ அம்பலமான பின், ரேவண்ணா தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளார். பணிப்பெண் கடத்தல் வழக்கில் இவரும், இவரது மனைவி பவானியும் ஜாமினில் உள்ளனர். இதனால், ரேவண்ணா சட்டசபைக்கு வரும் வாய்ப்பு குறைவு.
சட்டசபையில் ம.ஜ.த.,வுக்கு பேச்சுத்திறன் கொண்ட தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் இன்று சட்டசபை கூடுகிறது. ஆளுங்கட்சியை எப்படி எதிர்கொள்வது என்ற கவலை, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களை வாட்டி வதைக்கிறது.
சட்டசபையில் முதல்வரை, குமாரசாமி எப்படி எதிர்கொண்டார், அவர்களுக்கு இடையே நடக்கும் காரசார விவாதம் எப்படி இருந்தது என்பதை, ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் இப்போதும் நினைவுகூர்கின்றனர்.
கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்தும், குமாரசாமி மனம் தளரவில்லை. அவர் திறமையான எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். இம்முறை அவர் இல்லாமல், சட்டசபையில் ஆளுங்கட்சியினரை எப்படி எதிர்கொள்வது என, கையை பிசைகின்றனர்.
ம.ஜ.த., தலைவர் ஒருவர் கூறியதாவது:
அரசுக்கு எதிரான பல அஸ்திரங்கள், லட்டு போன்று கைக்கு கிடைத்துள்ளன. குமாரசாமி போன்ற தலைமை இருந்தால், இவற்றை பிரயோகித்து அரசை திக்குமுக்காட வைக்கலாம். காங்., அரசு பல ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இதை கண்டித்து கடுமையாக போராடியிருக்கலாம்.
ம.ஜ.த.,வுக்கு சவால்
இத்தகைய சூழ்நிலையில் குமாரசாமி சட்டசபையில் இருந்திருக்க வேண்டும். அவரது தலைமை இல்லாமல், சட்டசபையில் பங்கேற்பது ம.ஜ.த.,வுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் விமர்சகர் ரவீந்திரா கூறியதாவது:
குமாரசாமி சொல்வதை செய்து காண்பிக்கும் உறுதி கொண்டவர். தோல்வியில் துவளாமல் உடனடியாக எழுந்து நின்று, மீண்டும் யுத்த களத்தில் முன்னணியில் நிற்கும் குணம் கொண்டவர். எப்போதும் தன் குறிக்கோளில் உறுதியாக நிற்பவர். இதுவே அவரது வெற்றிக்கு காரணம்.
அவரை, 'ஹிட் அண்ட் ரன்' தலைவர் என, காங்கிரசார் விமர்சிக்கின்றனர். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை, அவர் பலமுறை பொய்யாக்கினார். பல விஷயங்களை இறுதி விவாதம் வரைக்கும் எடுத்து செல்வதில், அவர் வல்லவர்.
இவ்வாறு அவர் கூறினார்.