'அன்னபாக்யா'வுக்கு அரிசி பற்றாக்குறை மத்திய அரசிடம் கூடுதலாக கேட்க திட்டம்
'அன்னபாக்யா'வுக்கு அரிசி பற்றாக்குறை மத்திய அரசிடம் கூடுதலாக கேட்க திட்டம்
ADDED : செப் 01, 2024 11:28 PM
பெங்களூரு: முதல்வர் சித்தராமையாவின் கனவு திட்டமான அன்னபாக்யா திட்டத்துக்கு, மீண்டும் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசிடம் கூடுதல் அரிசி கேட்க, கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2013ல், முதன் முறையாக சித்தராமையா முதல்வரான போது, 'அன்னபாக்யா' திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள, பி.பி.எல்., குடும்பத்தினருக்கு மாதந்தோறும் தலா ஐந்து கிலோ இலவச அரிசி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு அவர் இரண்டாவது முறை முதல்வரான பின், ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தினார். இவற்றில் அன்னபாக்யா திட்டமும் ஒன்றாகும். திட்டத்தின் கீழ், மாதந்தோறும் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்குவதாக அறிவித்தார்.
ஆனால் அரிசி பற்றாக்குறையால், 10 கிலோ வழங்க முடியவில்லை. 5 கிலோ அரிசியும், 5 கிலோ அரிசிக்கான பணமும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
திட்டத்துக்காக வெளி மாநிலங்களில், அரிசி வாங்க அரசு முயற்சித்தது. அந்த மாநிலங்களிலும், அரிசி பற்றாக்குறை உள்ளது. எனவே இதுவரை அரிசிக்கு பதிலாக, பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது.
இதற்கிடையில், மத்திய அரசு, அன்னபாக்யா திட்டத்துக்கு, அடுத்தாண்டு மார்ச் வரை, 2.36 லட்சம் டன் அரிசி வழங்குவதாக கூறியது. ஆனால் மத்திய அரசு இவ்வளவு அரிசி வழங்கினாலும், திட்டத்துக்கு போதாது. 13.45 லட்சம் பேருக்கு அரிசி பற்றாக்குறை ஏற்படுகிறது.
எனவே கூடுதலாக 20 சதவீதம் அரிசி வழங்கும்படி, மத்திய அரசுக்கு கடிதம் எழுத உணவுத்துறை திட்டமிட்டுள்ளது. ஒருவேளை அரிசி கிடைத்தால், செப்டம்பரில் இருந்தே பயனாளிகளுக்கு 10 கிலோ அரிசி கிடைக்கும்.
பலர் தங்களுக்கு அரிசி வேண்டாம். பணமாகவே கொடுத்தால், உதவியாக இருக்கும் என, அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோன்று சிலர், அரிசியாகவே கேட்கின்றனர். இதற்கு அரசு தயாராக இருந்தும், அரிசி கிடைக்கவில்லை.