பெண்களே... குமாரசாமிக்கு ஓட்டு போடாதீர்கள் நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை
பெண்களே... குமாரசாமிக்கு ஓட்டு போடாதீர்கள் நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை
ADDED : ஏப் 16, 2024 05:56 AM

மாண்டியா, : ''முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு ஓட்டு போடாதீர்கள்,'' என்று, பெண்களுக்கு, நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை வைத்து உள்ளார்.
மாண்டியாவில் நடந்த அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில், நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது:
கர்நாடக அரசின் வாக்குறுதி திட்டங்களால் கிராம பெண்கள் வழி தவறி செல்கின்றனர் என்று, முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார்.
இதன் அர்த்தம் என்ன என்று அவருக்கு தெரியாதா. வழி தவறி சென்றது குமாரசாமி தான். ம.ஜ.த.,வை ஏழைகள், விவசாயிகளின் கட்சி என்று கூறுகின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு எதிரானவர்களுடன், கூட்டணி வைத்து உள்ளனர்.
குமாரசாமிக்கு மானம், மரியாதை இல்லை. பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடியை பற்றி குமாரசாமி விமர்சித்து பேசினார்.
தேவகவுடாவையும், அவரது குடும்பத்தையும் பிரதமர் மோடி விமர்சித்தார். ஆனால் அதை மறந்து விட்டு, இப்போது நாடகம் போடுகின்றனர்.
நீங்கள் போடும் நாடகங்களை கர்நாடக மக்கள் பார்த்து கொண்டு இருக்கின்றனர். கர்நாடகாவில் இருந்து பா.ஜ., - எம்.பி.,க்கள் 25 பேரை, டில்லிக்கு அனுப்பி வைத்தோம்.
நமது எம்.பி.,க்கள் பிரதமர் மோடிக்கு தேவை. ஆனால், கர்நாடகாவின் நலன் அவருக்கு தேவை இல்லை. கடந்த லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதாவை, குமாரசாமி என்னென்ன பேசினார் என்று, மாண்டியா மக்களுக்கு நன்கு தெரியும்.
இப்போது சுமலதாவிடம் சென்றே ஆதரவு கேட்கிறார். நமக்கு சுயமரியாதை முக்கியம். குமாரசாமிக்கு பெண்கள் ஓட்டு போடக் கூடாது. அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

