புரியில் துவங்கியது ரத யாத்திரை லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு
புரியில் துவங்கியது ரத யாத்திரை லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 08, 2024 02:00 AM

புரி : ஒடிசாவில் மிகவும் புகழ்பெற்ற புரி ஜெகன்னாதர் கோவிலின் ஆண்டு ரத யாத்திரை நேற்று மாலை துவங்கியது. லட்சக்கணக்கான மக்கள், 'ஜெய் ஜெகன்நாத்' என்ற கோஷங்களுடன் இதில் பங்கேற்றனர்.
ஒடிசாவின் புரியில் அமைந்துள்ள, ஜெகன்னாதர் கோவில். இந்தக் கோவிலில், ஜெகன்னாதர், அவருடைய சகோதரர் பாலபத்ரர் மற்றும் சகோதரி சுபத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஆண்டுதோறும் இந்தக் கோவிலில் நடக்கும் ரத யாத்திரை மிகவும் பிரபலம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரத யாத்திரையை பார்க்க குவிவர்.
ஒவ்வொரு ஆண்டும், மூன்று தேர்கள் தயாரிக்கப்படுவது இந்தக் கோவிலின் சிறப்பு. புரியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலில் உள்ள தங்கள் அத்தையை பார்ப்பதற்காக, தன் சகோதர, சகோதரியுடன், ஜெகன்னாதர் ரதத்தில் யாத்திரை மேற்கொள்வது இதன் பாரம்பரியமாகும்.
அதற்கு முன், புரி நகர் மற்றும் அருகில் உள்ள இடங்களுக்கும் யாத்திரை செல்லும்.
லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில், ரத யாத்திரை நேற்று துவங்கியது. ஜெகன்னாதர் நந்திகோஷா தேரிலும், பாலபத்ரர் தலத்வாஜா தேரிலும், சுபத்ரா தேவி தர்படலன் தேரிலும் பயணத்தை துவக்கினர்.
மிகுந்த அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த பிரமாண்ட தேர்களை பக்தர்கள் இழுத்துச் சென்றனர்.
முன்னதாக, கோவிலில் இருந்து மூன்று மூர்த்திகளும், பக்தர்களின் பலத்த கோஷங்களுடன், வேத மந்திரங்கள் ஓத, சங்கொலி முழங்க, மத்தளங்கள் கொட்ட, தேர்களுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
வழக்கமாக, ஒரு நாளில் நடத்தப்படும் இந்த யாத்திரை, இந்த ஆண்டு சில ஜோதிட காரணங்களுக்காக இரண்டு நாட்களாக நடக்க உள்ளது. இதன் வாயிலாக, 53 ஆண்டுகளுக்குப் பின், ரத யாத்திரை விழா இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.
இந்த தேர் திருவிழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் மோகன் சரண் மஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.