வெந்நீர் குளிர்ந்த நீராக மாறும் லட்சுமி நாராயணா சுவாமி
வெந்நீர் குளிர்ந்த நீராக மாறும் லட்சுமி நாராயணா சுவாமி
ADDED : மே 30, 2024 09:54 PM

- நமது நிருபர் -முடியவே முடியாது என்று நினைக்கும் விஷயங்களை கூட, 'கடவுள் மீது பாரத்தை போட்டோம்; நல்லபடியாக முடிந்து விட்டது' என சொல்வதை பார்த்து இருப்போம்.
கடவுளால் நிகழ்த்த முடியாத அதிசயம் என்று எதுவும் இல்லை. கோவில்களிலும் பல அதிசயங்கள் நடந்து இருக்கின்றன. கர்நாடகாவின் ஒரு கோவிலில் வெந்நீர், குளிர்ந்த நீராக மாறும் அதிசயம் நடக்கிறது.
ராய்ச்சூரின் தேவதுர்கா அருகே கப்பூர் கிராமத்தில் உள்ளது,
லட்சுமி நாராயணா கோவில். இக்கோவில் வளாகத்திற்குள் ஆஞ்சநேயா, லட்சுமி நரசிம்மா கோவில்களும் உள்ளன.
லட்சுமி நாராயணா சுவாமி சிலையின் தலையில் வெந்நீர் ஊற்றினால், பாதத்திற்கு வரும் போது, குளிர்ந்த நீராக மாறி விடுகிறது. அந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து, சிலையின் பாதத்தில் ஊற்றினால், மீண்டும் வெந்நீராக மாறி விடுகிறது.
இந்த அதிசயத்தை பார்க்க ராய்ச்சூர், பாகல்கோட், விஜயபுரா, கதக், கொப்பால், ஹாவேரி, யாத்கிர், பல்லாரி உள்ளிட்ட கர்நாடகாவின் வட மாவட்டங்களிலும் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும், தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர். கோவிலில் நடக்கும் அதிசயத்தை பார்த்து மெய்சிலிர்த்து போகின்றனர்.
பெங்களூரில் இருந்து கப்பூர் 442 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், மெஜஸ்டிக்கில் இருந்து தேவதுர்கா சென்று, அங்கிருந்து கப்பூர் செல்ல வேண்டும். ரயிலில் செல்வோர் ராய்ச்சூரில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.