ADDED : ஆக 16, 2024 10:54 PM

பெங்களூரு : சுதந்திர தினத்தன்று, லால்பாக் பூங்காவில் நடந்து வரும் மலர் கண்காட்சியை, 2.1 லட்சம் பேர் பார்வையிட்டனர்.
சுதந்திர தினத்தை ஒட்டி, கர்நாடக தோட்டக்கலை துறை சார்பில், பெங்களூரு லால்பாக் பூங்காவில், 216வது மலர் கண்காட்சி, இம்மாதம் 8ம் தேதி ஆரம்பமானது. நாளை நிறைவு பெறுகிறது.
இதற்கிடையில், சுதந்திர தினமான நேற்று முன்தினம், பள்ளி, கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், மலர் கண்காட்சியை பார்க்க கூட்டம் அலைமோதியது.
காலை 9:00 முதல், மாலை 6:00 மணி வரையிலும், டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலர் கண்காட்சியுடன், போன்சாய், காய்கறிகளால் ஆன பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மாடி வீட்டுத் தோட்டத்துக்கு தேவையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் போல் இருந்தது.
அந்த வகையில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.28 லட்சம் பெரியோர், 81,000 பேர் சிறார்கள் என மொத்தம் 2.1 லட்சம் பார்வையாளர்கள், மலர் கண்காட்சியை பார்த்து ரசித்தனர். இதன் மூலம், 92.5 லட்சம் ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலாகி உள்ளது.
இன்றும், நாளையும் வார விடுமுறை என்பதாலும், நாளை கடைசி நாள் என்பதாலும், கூட்டம் அலை மோதும் வாய்ப்பு உள்ளது.

