ADDED : ஜூலை 03, 2024 10:21 PM

கர்நாடகாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில், சுற்றுலா பயணியரின் மனம் கவரும் இடமாக மாறி உள்ளது லால்குலி நீர்வீழ்ச்சி. உத்தர கன்னடாவின் எல்லாபுராவில் இருந்து 17 கி.மீ.,யில் உள்ளது லால்குலி கிராமம். இந்த கிராமத்தில் லால்குலி நீர்வீழ்ச்சி உள்ளது. காளி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சி 61 அடி உயரத்தில் உள்ளது. தற்போது அப்பகுதியில் பெய்து வரும் மழையால், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. எல்லாபுராவில் இருந்து கிராமத்திற்கு செல்லும் இரு பக்கமும், பச்சை பசேலென காட்சியளிக்கிறது. வாகனத்தில் செல்லும்போது இயற்கை எழில் நிறைந்த காட்சிகளை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
அருவிக்கு சென்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சியை பார்க்கும்போது, மனதிற்கு ஒரு வித மகிழ்ச்சி கிடைக்கும். தினமும் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி உண்டு.
பெங்களூரில் இருந்து 439 கி.மீ.,யிலும், கார்வாரிலிருந்து 114 கி.மீ.,யிலும் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது.பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்பவர்கள் எல்லாபுரா சென்று அங்கிருந்து, வாடகை வாகனங்களில் நீர்வீழ்ச்சிக்கு சென்றடையலாம்.
லால்குலி நீர்வீழ்ச்சியில் இருந்து 35 கி.மீ.,யிலும்; சதோடி நீர்வீழ்ச்சி 44 கி.மீ.,யிலும்; அடிவேரி பறவைகள் சரணாலயம் 66 கி.மீ.,யிலும் அமைந்துள்ளது.
- - நமது நிருபர்--