எதிர்க்கட்சி தலைவர் மீது நிலமோசடி புகார்; ஏட்டிக்கு போட்டியாக கவர்னரிடம் காங்., மனு
எதிர்க்கட்சி தலைவர் மீது நிலமோசடி புகார்; ஏட்டிக்கு போட்டியாக கவர்னரிடம் காங்., மனு
ADDED : செப் 03, 2024 11:28 PM

பெங்களூரு : காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே குடும்பத்தினருக்கு இலவச அரசு நிலம் ஒதுக்கியதாக கவர்னரிடம் புகார் அளித்த மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி மீது, காங்கிரஸ் தலைவர்கள் நில முறைகேடு புகார் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குடும்பத்தினருக்கு சொந்தமான சித்தார்த்தா விஹாரா டிரஸ்ட்டிற்கு, பெங்களூரில் தேவனஹள்ளியில் கர்நாடக தொழில் மேம்பாட்டு வாரியம் சார்பில், 5 ஏக்கர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டது.
27ல் புகார்
இதில், அமைச்சராக இருக்கும் பிரியங்க் கார்கே, அதிகார துஷ்பிரயோகம் செய்து, தங்கள் டிரஸ்ட்டிற்கு இலவசமாக அரசு நிலத்தை ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும்படியும், கர்நாடக மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, ஆகஸ்ட் 27ம் தேதி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் செய்தார்.
எனவே, எந்த அடிப்படையில் நிலம் ஒதுக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கும்படி, மாநில தலைமை செயலருக்கு, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில், ஏட்டிக் குப் போட்டியாக, சலவாதி நாராயணசாமி மீது, கவர்னரிடம் காங்கிரஸ் தலைவர்கள் நேற்று புகார் அளித்தனர்.
ஆளுங்கட்சியின் மேல்சபை தலைமை கொறடா சலீம் அகமது தலைமையிலான காங்கிரஸ் குழு, ராஜ்பவனில் கவர்னரை சந்தித்து புகார் செய்தனர். அவர் மீது விசாரணை நடத்த அனுமதி வழங்கும்படியும் கோரினர்.
பின், காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் ரமேஷ்பாபு கூறியதாவது:
ஆதர்ஷா பள்ளி மற்றும் கல்விக் குழும தலைவராக இருப்பவர் சலவாதி நாராயணசாமி. இவர், 2002 நவம்பர் 24ம் தேதி முதல், 2005 மே 5ம் தேதி வரை, கர்நாடக வீட்டு வசதி வாரிய உறுப்பினராக பதவி வகித்தார்.
பள்ளி கட்டவில்லை
அப்போது, பள்ளி கட்டுவதற்காக என்று கூறி, 2004 மே 26ம் தேதி, 25,841 சதுர அடி அரசு நிலத்தை, 12,27,479 ரூபாய் செலுத்தி பெற்றுள்ளார். 5 ஆண்டுகளில் பள்ளி கட்டவில்லை என்றால், கர்நாடக வீட்டு வசதி வாரியத்துக்கு இடத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால், பள்ளியை கட்டாமல், 2006 ஜூலை 28ம் தேதி, டெலி கம்யூனிகேசன் மற்றும் பப்ளிக் சர்வீஸ் என்ற நிறுவனம் துவக்குகிறேன் என்று தன் முடிவை மாற்றியுள்ளார். ஆனால், அந்த இடத்தில் தற்போது, 'தம் பிரியாணி கடை' செயல்படுகிறது.
நம்பிக்கை துரோகம் செய்து, அரசு நிலத்தை பெற்றுள்ளதால், அவர் மீது விசாரணை நடத்த கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.