டீஸ்டா அணை அருகே நிலச்சரிவு; நீர்மின் நிலையம் கடும் சேதம்
டீஸ்டா அணை அருகே நிலச்சரிவு; நீர்மின் நிலையம் கடும் சேதம்
UPDATED : ஆக 21, 2024 06:44 AM
ADDED : ஆக 21, 2024 02:06 AM

புதுடில்லி: சிக்கிமில் டீஸ்டா அணை அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், அங்குள்ள நீர் மின் நிலையம் பலத்த சேதமடைந்தது. முன்னெச்சரிக்கையாக அங்கு அனைவரும் வெளியேற்றப்பட்டதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், தேசிய நீர்மின் கழகத்தின் நீர்மின் நிலைய 5வது அலகு இயங்கி வருகிறது. 510 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இந்த நீர்மின் நிலையத்தில், சமீப நாட்களாக அடிக்கடி சிறுசிறு நிலச்சரிவு ஏற்பட்டு வந்தது.
இதன் காரணமாக, இந்த நீர்மின் நிலையத்தில் பணியாற்றியோர், அதன் அருகே வசித்தவர்கள் என அனைவரும், முன்னெச்சரிக்கையாக கடந்த வாரமே வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று டீஸ்டா அணை அருகே உள்ள மலைத்தொடரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது மலையடிவாரத்தில் அமைந்துள்ள நீர்மின் நிலையத்தின் மீது பெரும் பாறைகள் சரிந்து விழுந்ததில் பலத்த சேதமடைந்தது.
இதில், எந்த உயிரிழப்பும், காயமும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழையால் இந்த டீஸ்டா அணையின் சில பகுதிகள் அடித்து செல்லப்பட்டதால், அணை செயலிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தொடர் கனமழையின் காரணமாக, தலைநகர் கோஹிமாவில் இருந்து திமாபூர் நகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அவ்வழித்தடம் நேற்று மூடப்பட்டது.
டில்லி, வடகிழக்கு மாநில கனமழை
டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று காலை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
அதிகபட்சமாக டில்லி ரிட்ஜ் பகுதியில், 7 செ.மீ., மழை பதிவானது. பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியதால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராஜஸ்தான் மாநிலத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஜெய்ப்பூரில் 8 செ.மீ., மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. ஹைதராபாத் ஒட்டியுள்ள ராம்நகர் பகுதியில், சாலையை கடக்க முயன்ற 40 வயதான நபர், மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதே பகுதியில், அவரது உடலை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
வட கிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுராவிலும் நேற்று பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.