லடாக்கில் தற்காலிக மருத்துவமனை 'பாராசூட்'டில் தரையிறக்கி சாதனை
லடாக்கில் தற்காலிக மருத்துவமனை 'பாராசூட்'டில் தரையிறக்கி சாதனை
ADDED : ஆக 19, 2024 01:06 AM

புதுடில்லி, ஆக. 19-
நம் ராணுவமும், விமானப் படையும் இணைந்து, லடாக்கின் 15,000 அடி உயரத்தில், பாராசூட் வாயிலாக தற்காலிக மருத்துவமனையை வெற்றிகரமாக தரை இறக்கி சாதனை படைத்துள்ளன.
நம் நாட்டில் மருத்துவ வசதிகள் சென்று சேராத தொலைதுார பகுதிகளுக்கு மருத்துவ சேவையை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக, உலகின் முதல், 'போர்டபிள்' எனப்படும், இடம் மாற்றக்கூடிய மருத்துவமனையை நம் ராணுவம் உருவாக்கி உள்ளது.
'ஆரோக்கிய மைத்ரி ஹெல்த் க்யூப்' என, இந்த தற்காலிக மருத்துவமனைக்கு பெயரிடப்பட்டுள்ளது.
போர் அல்லது பேரிடர் காலங்களில் மலை உச்சி அல்லது அடர்ந்த வனப்பகுதி உள்ளிட்ட சிக்கலான நிலப்பரப்புகளில் மருத்துவ சேவை வழங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
நம் ராணுவப் படையினர் முகாமிட்டுள்ள சியாச்சின், லடாக் மலைப்பகுதிகளில் இத்தகைய தற்காலிக மருத்துவமனைக்கு தேவை அதிகம் உள்ளது. அதை மனதில் வைத்து, இந்த போர்டபிள் மருத்துவமனை க்யூப்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனை, நம் விமானப் படைக்கு சொந்தமான சி130ஜே ரக ஹெர்குலஸ் போர் விமானத்தில் ஏற்றி செல்லப்பட்டது.
பின், நம் ராணுவத்தின், 'பாரா பிரிகேட்' எனப்படும், பாராசூட் படையினரின் உதவியுடன், விமானத்தில் இருந்து லடாக்கின் 15,000 அடி உயரத்தில் உள்ள மலைப் பகுதியில், இந்த தற்காலிக மருத்துவமனை துல்லியமாக தரையிறக்கப்பட்டது.
இந்த சாதனையை நம் ராணுவ அமைச்சகம் வெகுவாக பாராட்டி உள்ளது. 15,000 அடி உயரத்தில் மருத்துவமனை அமைக்கப்பட்டது, உலக அளவில் இதுவே முதன்முறை என்றும் கூறப்படுகிறது.
இந்த போர்டபிள் மருத்துவமனையில் உயிர் காக்க தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளையும் அளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

