ADDED : ஆக 03, 2024 04:17 AM

மாண்டியா : கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கும், கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பின. இரண்டு அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
ஜூலை 31ம் தேதி இரு அணையில் இருந்தும் வினாடிக்கு 2,22,161 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரு அணையில் இருந்தும் 1,49,501 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டது.
மொத்தம் 49.45 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, கே.ஆர்.எஸ்., அணையில் 46.50 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது. வினாடிக்கு 79,607 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 58,546 கனஅடி வெளியே சென்றது.
இதேபோல், 19.52 டி.எம்.சி., கொள்ளவு கொண்ட கபினி அணையில் 17.47 டி.எம்.சி., நீர் இருப்பு இருந்தது. வினாடிக்கு 36,031 கனஅடி தண்ணீர் வந்தது. 33,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இரு அணையில் இருந்தும் 91,546 கனஅடி வெளியேறியது. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு தொடர்ந்து குறைக்கப்படுகிறது.
ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூர் ஷிராடிகாட் வனப்பகுதி சாலையில், நான்காவது நாளாக நேற்றும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலை மீண்டும் மூடப்பட்டது. அந்த சாலையில் செல்ல இருந்த வாகனங்கள், ஹாசன் ரூரல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டன.