ADDED : ஏப் 26, 2024 12:38 AM

இடாநகர்: அருணாச்சலில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், சீன எல்லையோர மாவட்டத்தில் உள்ள முக்கிய நெடுஞ்சாலையின் பெரும் பகுதி துண்டிக்கப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சீன எல்லையோர மாவட்டம் திபாங் பள்ளத்தாக்கு. இதன் தலைநகர் அனினி.
கடந்த சில நாட்களாக இந்த மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. மாவட்ட தலைநகரையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக என்.எச்., 313 உள்ளது.
கனமழை காரணமாக மாவட்டத்தின் அனினி மற்றும் ஹுன்லி பகுதிகளுக்கு இடையே நேற்று முன் தினம் இரவு பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சில இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு, பல அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகிஉள்ளது.
மலைப் பிரதேசமான அருணாச்சலில் உள்ளூர் மக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் போக்குவரத்துக்கு இது தான் ஒரே நெடுஞ்சாலையாக இருந்தது.
தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவு நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

