ADDED : செப் 03, 2024 12:32 AM

ஜம்மு: ஜம்மு - காஷ்மீரின் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு யாத்திரை சென்ற இரண்டு பெண் பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரில் ரேசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர்.
இந்நிலையில், அங்கு கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், ஹிம்கோடி வழியாக யாத்திரை செல்லும் பாதையில் பாஞ்சி என்ற இடத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
அதில், யாத்திரை சென்ற பக்தர்கள் சிலர் சிக்கியதுடன், அவர்கள் மீது இரும்பு மேற்கூரை சரிந்து விழுந்தது.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை மீட்டனர்.
இதில், இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்பூரைச் சேர்ந்த சப்னா, 27, மற்றும் உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்த நேஹா, 23, என்பது தெரியவந்தது.