மாணவி நேஹா பெற்றோருக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆறுதல்
மாணவி நேஹா பெற்றோருக்கு எதிர்க்கட்சி தலைவர் அசோக் ஆறுதல்
ADDED : மே 01, 2024 08:20 AM

ஹூப்பள்ளி : கொலையான கல்லுாரி மாணவி நேஹா பெற்றோருக்கு, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேரில் ஆறுதல் கூறினார்.
ஹூப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் நிரஞ்சன். இவரது மகள் நேஹா, 22. எம்.சி.ஏ., படித்தார். கடந்த மாதம் 18ம் தேதி மாலை கல்லுாரி வளாகத்தில் நேஹாவை, பயாஸ், 22, என்பவர் கத்தியால் குத்திக் கொன்றார். கொலையாளி கைது செய்யப்பட்டார். சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் ஹாவேரிக்கு தேர்தல் பிரசாரத்திற்காக, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் நேற்று சென்றார். முன்னதாக ஹூப்பள்ளியில் உள்ள நேஹா வீட்டிற்குச் சென்று, பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
நேஹாகாவை கொன்ற பயாஸுக்கு பின்னால் இருப்பது யார் என்று, முதலில் கண்டுபிடிக்க வேண்டும். 'லவ் ஜிகாத்' நடக்கிறதா என்று தீவிரமாக விசாரிக்க வேண்டும். நேஹா கொலையில் நாங்கள் அரசியல் செய்யவில்லை.
சி.ஐ.டி., விசாரணையில் நம்பிக்கை இல்லை. சாட்சிகளை சேகரிக்க புல்லட் ரயில் வேகத்தில், போலீசார் செயல்பட வேண்டும். ஆனால் விசாரணையில் வேகம் இல்லை. இது ஒரு கொடூர கொலை.
சட்டசபை கூட்டத்தில் பிரச்னை கிளப்புவேன். 15 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் கல்லுாரிக்குள் புகுந்து, ஒருவன் கொலை செய்கிறான் என்றால், மாணவர்கள் பாதுகாப்புக்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அர்த்தம். கொலையாளிகளை காப்பாற்றும் முயற்சி நடக்கிறது.
இவ்வாறு அவர்கூறினார்.