ADDED : ஆக 05, 2024 06:41 PM
சாணக்யாபுரி:டில்லி சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக, பா.ஜ.,வின் ரோகினி எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டார்.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக ராம்வீர் சிங் பிதுரி இருந்தார். லோக்சபா தேர்தலில் தெற்கு டில்லி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.
இதையடுத்து சட்டசபை புதிய எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்ய மாநில பா.ஜ., முடிவு செய்தது. நேற்று சாணக்யாபுரியில் உள்ள மாநில பா.ஜ., அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ஏழு பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், இணைப் பொறுப்பாளர் அல்கா குர்ஜார், தலைவர் வீரேந்திர சச்தேவா, பொதுச் செயலர் (அமைப்பு) பவன் ராணா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
விஜேந்தர் குப்தாவின் பெயரை கட்சியின் தலைமைக் கொறடா அஜய் மஹாவர் முன்மொழிந்தார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா வெளியிட்ட அறிக்கையில், ரோகினி தொகுதி எம்.எல்.ஏ., விஜேந்தர் குப்தா, புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் 2020 வரை எதிர்க்கட்சித் தலைவராக விஜேந்தர் குப்தா செயல்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சில மாதங்கள் மட்டும் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் வாய்ப்பு விஜேந்தர் குப்தாவுக்கு கிடைத்துள்ளது.