ADDED : ஏப் 27, 2024 10:58 PM

பெங்களூரு: லோக்சபா தேர்தலின் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் தொகுதிகளில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பார்வையை திருப்பி உள்ளனர். அந்தந்த தொகுதிகளுக்கு பிரசாரம் செய்ய, தங்களின் பரிவாரங்களுடன் படையெடுக்கின்றனர்.
கர்நாடகாவின் 14 லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன் தினம் ஓட்டுப்பதிவு முடிந்தது. இரண்டாம் கட்டமாக, மே 7ல் வட மாவட்டங்களின் லோக்சபா தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது, இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கு தயாராகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் எம்.பி., ராகுல், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட மற்ற தலைவர்கள் தங்களின் பரிவாரங்களுடன், வட மாவட்டங்களுக்கு படை எடுக்கின்றனர்.
தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில், ஷிவமொகா, தாவணகெரேவை தவிர, மற்ற தொகுதிகளில் காங்கிரஸ், பா.ஜ., இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது. ஷிவமொகாவில் ஈஸ்வரப்பா, தாவணகெரேவில் வினய் குமார் மும்முனை போட்டிக்கு காரணமாகி உள்ளனர்.
கர்நாடகாவின் இரண்டாம் கட்ட தேர்தலில், மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, ஜெகதீஷ் ஷெட்டர், பகவந்த் கூபா, ஸ்ரீராமுலு உட்பட முக்கிய தலைவர்களின் அரசியல் எதிர்காலம் அடங்கியுள்ளது. அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகன் மிருணாள், அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியின் மகள் பிரியங்கா, அமைச்சர் சிவானந்த் பாட்டீலின் மகள் சம்யுக்தா, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே மகன் சாகர் போன்ற இளம் தலைவர்களின் எதிர்காலத்தையும் முடிவு செய்யும்.
இதுபோன்று முதல்வர் சித்தராமையா, உத்தரகன்னடாவின் குமட்டா, முன்டகோடாவில் பிரசாரம் செய்து ஓட்டுக் கேட்பார். நாளை பாகல்கோட்டில் பிரசாரம் செய்வார்.

