காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சத்தமே இல்லாமல் காய் நகர்த்தும் தலைவர்கள்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சத்தமே இல்லாமல் காய் நகர்த்தும் தலைவர்கள்
ADDED : ஜூன் 29, 2024 04:32 AM

பெங்களூரு: கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இரண்டு அமைச்சர்கள், மூத்த தலைவர் சத்தமே இன்றி காய் நகர்த்தி வருகின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சிவகுமார். துணை முதல்வராகவும் உள்ளார். கடந்த 2020ல் இருந்து மாநில தலைவராக பதிவு வகித்து வருகிறார். கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் முடிந்ததும், சிவகுமார் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று தகவல் வெளியானது.
ஆனால் லோக்சபா தேர்தல் வரை தலைவராக நீடிக்க அனுமதிக்க வேண்டும் என, கட்சி மேலிடத்திடம், சிவகுமார் அனுமதி கேட்டார். இதற்கு மேலிடமும் சம்மதம் தெரிவித்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்துவிட்டதால், சிவகுமாரை அந்தப் பதவியில் இருந்து இறக்க வேண்டும் என, காங்கிரஸில் சில தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகின்றனர்.
ஒருவேளை சிவகுமார் மாநில தலைவர் பதவிலிருந்து இறக்கப்பட்டால், தங்களுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுங்கள் என, சத்தமே இல்லாமல் சில தலைவர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
அதாவது லிங்காயத் சமூகத்தை சேர்ந்த வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, எஸ்.டி., சமூகத்தைச் சேர்ந்த பொதுப்பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர், தங்களுக்கு தலைவர் பதவி தர வேண்டும் என, கட்சியின் பொதுச் செயலர் வேணுகோபாலிடம் கேட்டுள்ளனர்.
'நாங்கள் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர்களாக பணியாற்றியுள்ளோம். எங்களுக்கு தலைவர் பதவி கொடுத்தால் திறம்பட நிர்வகிப்போம்' என, அவர்கள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களை தவிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சோனியாவின் ஆதரவாளருமான ஹரி பிரசாத்தும் தலைவர் பதவி தனக்கு தரும்படி கேட்டுள்ளார்.

