செல்வாக்கு மிக்கவர்களுக்கு சாதகமாக நடக்கும் அரசுக்கு 'லெப்ட் அண்டு ரைட்!' : 43 பேர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய முயன்றதாக புகார்
செல்வாக்கு மிக்கவர்களுக்கு சாதகமாக நடக்கும் அரசுக்கு 'லெப்ட் அண்டு ரைட்!' : 43 பேர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய முயன்றதாக புகார்
ADDED : பிப் 28, 2025 11:03 PM
கர்நாடகாவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கன்னட ஆதரவு அமைப்புகள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் என பலர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவற்றில் செல்வாக்குமிக்க 43 பேரை காப்பாற்றும் நோக்கில், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 60 வழக்குகளை வாபஸ் பெறும்படி காங்கிரஸ் அரசு, கடந்த அக்டோபர் 10ல், அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது.
எதிர்ப்பு
இவ்விஷயம், மாநிலத்தில் பெரும் பேசும் பொருளானது. குற்றவாளிகளை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை அரசு காப்பாற்றுகிறது என்று எதிர்ப்பு கிளம்பியது. அரசியல்வாதிகள் மீதான வழக்குகளை அதிக அளவில் ரத்து செய்வதாகவும் விமர்சனம் எழுந்தது.
ஆனால், மாநில அரசு தரப்பில், 'குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 321வது பிரிவின் கீழ் தான் வழக்குகளை ரத்து செய்ய உள்ளோம்' என விளக்கம் அளிக்கப்பட்டது. அரசின் இந்த விளக்கத்தை ஏற்காத பலரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, பெங்களூரை சேர்ந்த வழக்கறிஞர் பதவ்ராஜ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நேற்று முன்தினம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, நீதிபதி அருண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் தல்வாய் முன்வைத்த வாதம்:
வழக்குகளை வாபஸ் பெறும் அதிகாரம், மாநில அரசுக்கு கிடையாது. அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. சி.ஆர்.பி.எப்., சட்டத்தின் 321வது பிரிவின் கீழ், முக்கிய முடிவை எடுக்கும் அதிகாரம், அரசு வழக்கறிஞருக்கு மட்டுமே உள்ளது.
அரசு வழக்கறிஞரின் அலுவலகம் என்பது, தபால் நிலையம் அல்ல. அரசு வழக்கறிஞருக்கு வழக்குகளை வாபஸ் பெறும்படி, அழுத்தம் கொடுக்கக் கூடாது. இது போன்ற வழக்குகளை அரசு வாபஸ் பெறக்கூடாது என சட்டமே சொல்கிறது. இருப்பினும், மாநில அரசு வாபஸ் பெற முற்பட்டுள்ளது.
கொலை முயற்சி
இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் கலவரம், கொலை முயற்சி, போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள். இந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், 'இந்த வழக்குகளில், அரசு வழக்கறிஞரின் நிலைப்பாடு குறித்து, விசாரணை நீதிமன்றம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே முடிவு எடுக்க வேண்டும். இது போன்ற வழக்குகளை எந்த நீதிமன்றமும் வாபஸ் பெற அனுமதிக்காது. அப்படி செய்தால் ஆபத்தில் தான் முடியும்' என்றனர்.
வழக்கு விசாரணை, வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.