ADDED : ஆக 02, 2024 01:02 AM
விக்ரம் நகர்,:“நகரில் பரவலாக வடிகால் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இவற்றை சரியான சட்ட கட்டமைப்பின்றி தீர்க்க முடியாது,” என, டில்லி தலைமைச் செயலர் நரேஷ் குமார் கூறினார்.
மாநில நகர்ப்புற மேம்பாடு, பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கடிதத்துக்கு தலைமைச் செயலர் நரேஷ் குமார் அளித்துள்ள பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
டில்லிக்கான வடிகால் திட்டப்பரிந்துரைகள், நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாட்டுத் துறையால் தயாரிக்கப்பட்ட டில்லிக்கான புயல் நீர் மற்றும் வடிகால் சட்ட வரைவு ஆகிய கோப்புகளை நிறைவேற்ற வேண்டும். இன்னும் அவை கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன.
வடிகால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கும் கட்டுமானக்கழிவுகளை கொட்டுபவர்களுக்கும் தொழிற்சாலை கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கும் அபராதம் விதிக்க சட்ட வரைவு அனுமதிக்கிறது.
மேற்கண்ட கோப்புகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் உங்களிடம் நிலுவையில் உள்ளன.
பழைய ராஜேந்தர் நகரில் வெள்ளத்தில் மூழ்கி ஐ.ஏ.எஸ்., பயிற்சி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்ததற்கு, மழைநீர் வடிகால் அமைப்பை ஆக்கிரமித்து கட்டியதே காரணம் என்பது, மாநகராட்சி மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்தது.
மாநகராட்சி எடுத்த புகைப்படங்கள் ஆக்கிரமிப்பை உறுதி செய்துள்ளன. நகரில் வடிகால் ஆக்கிரமிப்புகள், நகர் முழுவதும் பல இடங்களில் காணப்படுகிறது.
உரிய சட்டங்கள் இல்லாததால் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை.
இவ்வாறு அமைச்சருக்கு அனுப்பிய பதிலில் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.
வரைவு சட்டம் தொடர்பான எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்பதை நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை முதன்மைச் செயலரிடம் உறுதி செய்துள்ளேன்.
என் தரப்பில் எந்த முடிவு இன்னும் நிலுவையில் உள்ளது என்பதை தலைமைச் செயலர் இன்னும் விளக்கவில்லை. பொருத்தமில்லாத விஷயங்களை எழுதுவதற்குப் பதிலாக, என் கேள்விக்கு துல்லியமான பதிலை அனுப்ப வேண்டும்.
பொது நிலங்கள் மற்றும் பொதுப் பயன்பாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் போதுமான விதிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன்.
சவுரப் பரத்வாஜ்
ஆம் ஆத்மி அமைச்சர்