ADDED : மார் 05, 2025 10:42 PM

பாலக்காடு; பாலக்காடு, நெல்லியம்பதி வனத்தில், இறந்து கிடந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மாரா அருகே உள்ள நெல்லியாம்பதி வன பகுதியில், லில்லி வன கோட்டம் அருகே, தேயிலைத் தோட்டத்தில் நேற்று காலை, சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதை அப்பகுதிக்கு வேலைக்கு வந்த தேயிலைத் தொழிலாளிகள் கண்டனர்.
தகவல் அறிந்து வந்த நெல்லியாம்பதி துணை ரேஞ்சர் ஜெயேந்திரன் தலைமையிலான வனத்துறையினர், சிறுத்தையின் உடலை மீட்டு நெல்லியாம்பதி வனத்துறை அலுவலகத்திற்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். துணை ரேஞ்சர் ஜெயேந்திரன் கூறுகையில், ''12 வயது மதிக்கத்தக்க சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது.
வனத்துறையின் கால்நடை மருத்துவர் டேவிட் ஆபிரகாமின் தலைமையில் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அந்த முடிவு வந்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும்,'' என்றனர்.
அதே நேரத்தில், அப்பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கை வனத்துறை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.