ADDED : ஆக 08, 2024 10:16 PM

பெங்களூரு : ''கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு குறைந்தாலும், அக்டோபர் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்,'' என சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:
டெங்கு பாதிப்பு குறைந்த பின், காய்ச்சல் கட்டுக்குள் வந்ததாக கூற முடியாது. வெயில், மழை காரணமாக, டெங்கு பாதிப்பில் ஏற்ற இறக்கங்கள் உள்ளன.
மாநிலத்தில் நேற்று முன்தினம் மட்டும் 259 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில், 395 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால், மொத்த டெங்கு பாதிப்பு, 2,085 ஆக குறைந்து உள்ளது. ஆனாலும், அக்டோபர் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போது, டெங்கு பாதித்த 1,827 பேர், வீட்டு கண்காணிப்பில் உள்ளனர். 258 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 24 மணி நேரத்தில் 1,989 சோதனைகள் நடத்தப்பட்டன. பெங்களூரு மாநகராட்சியின் கீழ் உள்ள 126 மாவட்டங்களில், 27 மாவட்டங்களில் புதிய டெங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
பெலகாவியில் 23, துமகூரில் 13 வழக்குகள் பதிவாகி உள்ளன. மாநிலத்தில் டெங்குவை கண்டறிய இதுவரை 1.38 லட்சம் பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு உள்ளன. டெங்கு பாதித்தவர்கள் எண்ணிக்கை 19,923 ஆக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.