லட்சுமணை சிறைக்கு அனுப்புவோம்! பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆவேசம்
லட்சுமணை சிறைக்கு அனுப்புவோம்! பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா ஆவேசம்
ADDED : மார் 28, 2024 10:44 PM

மைசூரு : “மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் மீது, இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம்,” என, பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா சவால் விடுத்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
மைசூரு காங்கிரஸ் வேட்பாளர் லட்சுமண் மீது, இரண்டு கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. அவரை சிறைக்கு அனுப்பாமல் விடமாட்டோம். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியை பற்றி, லட்சுமண் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.
இவருக்கு இப்போதுதான், ஒக்கலிக சமுதாயம் பற்றி நினைவுக்கு வந்துள்ளது. 47 ஆண்டுகளுக்குப் பின், ஒக்கலிகர் சமுதாயத்தினருக்கு சீட் கிடைத்துள்ளது. தன்னை வெற்றி பெற வைக்கும்படி வேண்டுகிறார்.
வரும் நாட்களில் நான் தொண்டர்களுக்கு இடையிலேயே இருப்பேன். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பேன். இதன் மூலம் தொண்டர்களுடன் கலந்து பழகவில்லை என்ற குற்றச்சாட்டில் இருந்து, நான் வெளியே வருவேன்.
மைசூரின் எட்டு தொகுதிகளில், நரசிம்ம ராஜா தொகுதியை தவிர, மற்ற தொகுதிகளில் பா.ஜ., வேட்பாளர் யதுவீர், தலா 50,000 ஓட்டுகள் முன்னிலையில் இருக்கும்படி, தொண்டர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மைசூரு தொகுதியில் 1,300க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து இடங்களுக்கும் யதுவீரால் நேரில் சென்று ஓட்டுக் கேட்க முடியாது. எனவே தொண்டர்களே கட்சியை பலப்படுத்தி, கட்சிக்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும்.
மைசூரு தொகுதியில் ஏற்கனவே இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளோம். மூன்றாவது முறை வெற்றி பெற்றால், கட்சியின் பலம் அதிகரிக்கும். கூடுதல் நிதியுதவி கொண்டு வந்து, வளர்ச்சிப் பணிகளை செய்யவும் உதவியாக இருக்கும்.
யது வம்சத்தினர் அளித்த பங்களிப்பு, நம் கண் முன்னேயே உள்ளது. இதே போன்று பிரதமர் நரேந்திர மோடியும், நினைவுகூரும் வகையில் பணியாற்றுகிறார். அவரது வளர்ச்சி திட்டங்கள் தொடர, பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

