ADDED : ஏப் 14, 2024 09:41 PM

துமகூரு: ''லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் சோமண்ணா தோற்று விடுவார். அடுத்த சட்டசபை தேர்தலில் ஷிகாரிபுராவில் போட்டியிட அவரை அனுப்புவோம்,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கிண்டல் அடித்து உள்ளார்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், துமகூரில் நேற்று அளித்த பேட்டி:
கடந்த சட்டசபை தேர்தலில் வருணா, சாம்ராஜ்நகர் தொகுதியில் தோற்று போனாலும், பா.ஜ., முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு, இன்னும் புத்தி வரவில்லை.
சொந்த தொகுதியான கோவிந்த்ராஜ் நகரை விட்டுக்கொடுத்த அவர், இப்போது நமது ஊருக்கு வந்து உள்ளார். இங்கேயும் அவர் தோற்று விடுவார். அவரை ஷிகாரிபுராவிற்கு அனுப்பி வைப்போம்.
அடுத்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைவர் விஜயேந்திராவிற்கு எதிராக, ஷிகாரிபுராவில் போட்டியிடுவார்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த, சித்தராமையா முதல்வராக இருப்பதையும், சிறப்பான ஆட்சி நடத்துவதையும், எதிர்க்கட்சியினரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. வாக்குறுதி திட்டங்களுக்கு 52,000 கோடி ரூபாய் ஒதுக்கியதுடன், வளர்ச்சி பணிகளுக்கும் சேர்த்து, பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி உள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகளும், சித்தராமையா முதல்வராக நீடிப்பரா என்ற விவாதம் இப்போது தேவையற்றது. கர்நாடகாவில் இருந்து 15 முதல் 20 காங்கிரஸ் எம்.பி.,க்களை, டில்லிக்கு மக்கள் அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

