சித்தராமையா விக்கெட்டையும் வீழ்த்துவோம்; எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூளுரை
சித்தராமையா விக்கெட்டையும் வீழ்த்துவோம்; எதிர்க்கட்சி தலைவர் அசோக் சூளுரை
ADDED : ஆக 18, 2024 11:30 PM

பெங்களூரு: முதல்வர் சித்தராமையா பதவி விலக கோரி, பெங்களூரு விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, பா.ஜ., இன்று போராட்டம் நடத்தும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் அறிவித்து உள்ளார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு, மூடாவில் இருந்து சட்டவிரோதமாக மனைகள் ஒதுக்கியது குறித்து, சட்டசபை கூட்டத்தொடரின் போதே, முதல்வர் விளக்கம் அளித்திருக்க வேண்டும்.
ஆனால் எங்களை பார்த்து பயத்தில் ஓடினர். இதனால் காங்கிரஸ் அரசு மீது, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. முதல்வரிடம் விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி வழங்கி உள்ளார்.
இனி ஒரு நிமிடம் கூட, முதல்வர் பதவியில் நீடிப்பதற்கு, சித்தராமையாவுக்கு தார்மீக உரிமை இல்லை. அவர் ராஜினாமா செய்ய கோரி, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு, நாளை (இன்று) எங்கள் கட்சி போராட்டம் நடத்துகிறது. எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள், எம்.பி.,க்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளேன். ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்களும் கலந்து கொள்வர். மத்திய அமைச்சர் குமாரசாமியுடன் பேசி உள்ளேன்.
கை கடிகாரம்
காங்கிரஸ் ஆட்சியில் ஊழலற்ற நிர்வாகம் கிடைக்கும் என்று மக்கள் நம்பினர்.
ஆனால், இந்த ஆட்சியில் தலித்துக்கள் மரணம் உறுதி. வார்த்தைக்கு வார்த்தை நான் தவறு செய்யவில்லை என்று, சித்தராமையா கூறுகிறார். கடந்த முறை அவர் முதல்வராக இருந்த போது, விலை உயர்ந்த கை கடிகாரம் அணிந்து இருந்தார்.
நாங்கள் கேள்வி கேட்டதால், கை கடிகாரத்தை ஊழல் தடுப்பு படையிடம் ஒப்படைத்து நைசாக நழுவினார்.
கடந்த முறையே அவர் மீது 65 ஊழல் புகார்கள் இருந்தன. ஆனால் அவர் தப்பித்து விட்டார். இந்த முறை நாங்கள் விடமாட்டோம். எடியூரப்பா முதல்வராக இருந்த போது, அவர் மீது நில முறைகேடு புகார் எழுந்தது. அவரை ராஜினாமா செய்யும்படி, எங்கள் கட்சி மேலிடம் கூறியது. ஆனால் சித்தராமையாவை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று, காங்கிரஸ் மேலிடம் கூறுகிறது.
அஜ்ஜய்யா சுவாமி
இது தான் அவர்களுக்கும், எங்களுக்கும் உள்ள வித்தியாசம். துணை முதல்வர் சிவகுமாருக்கு, முதல்வர் பதவி மீது ஆசை உள்ளது. இதை அவர் வெளிப்படையாக கூறிவிட்டார். நான் சன்னியாசி இல்லை என்றும் கூறி உள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் சிவகுமார் முதல்வர் ஆவார் என்று, அஜ்ஜய்யா சுவாமிகளும் கணித்து உள்ளார்.
முதல்வர் பதவி விவகாரம் காங்கிரசின் உட்கட்சி பிரச்னை. வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, நாங்கள் நடத்திய போராட்டத்தில் அமைச்சராக இருந்த, நாகேந்திராவின் விக்கெட் விழுந்தது. சித்தராமையாவின் விக்கெட்டையும் வீழ்த்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.