ADDED : ஆக 15, 2024 04:05 AM

பெங்களூரு, : 'வார இறுதியில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும்' என, போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனர் அனுசேத் கடிதம் எழுதி கேட்டுக்கொண்டுள்ளார்.
வெளிவட்ட சாலையில் உள்ள நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
பெங்களூரில் வார இறுதி நாட்களில் தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நகரின் வெளிவட்ட சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இத்துடன், இன்று சுதந்திர தினம், 16ல் வரமஹாலட்சுமி விரதம், 17, 18 வார இறுதி நாள் என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் சொந்த ஊருக்கு செல்வோரும், சுற்றுலா செல்வோரும் உள்ளனர்.
இச்சாலையில் உள்ள நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும். இதனால் தேவையற்ற தாமதங்களை தவிர்க்கலாம். வாகனங்கள் நெரிசல் இன்றி செல்ல வாய்ப்பு இருக்கும். மழையால் ஏற்படக்கூடிய பேரிடர்களை தவிர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.