ADDED : செப் 09, 2024 04:42 AM
ராய்ச்சூர் : சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ராய்ச்சூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
ராய்ச்சூர் அருகே ஆஷாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லி முனிநாயக், 30. இவருக்கும், உறவுக்கார தம்பதியின் மகளான 15 வயது சிறுமிக்கும், கடந்த 2019ல் பழக்கம் ஏற்பட்டது.
இருவரும் காதலித்தனர். திருமண ஆசை காட்டி சிறுமியுடன், மல்லி முனிநாயக் அடிக்கடி உல்லாசமாக இருந்தார்.
இதற்கிடையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சிறுமி, மல்லியிடம் சண்டை போட்டார்.
அப்போது சிறுமியை மிரட்டினார். திருமணம் செய்யவும் மறுத்து விட்டார்.
அதிர்ச்சி அடைந்த சிறுமி தன்னை திருமணம் செய்வதாக கூறி, தன்னை ஏமாற்றியது பற்றி பெற்றோரிடம் புகார் கூறினார். பெற்றோர் அளித்த புகாரில், மல்லி முனிநாயக் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது ராய்ச்சூர் 1வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி பிரபு ஹட்டிகர் தீர்ப்பு கூறினார். மல்லி முனிநாயக்கிற்கு ஆயுள் தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.