வங்கதேசம் போல் இங்கும் நடக்கலாம்' : குர்ஷித் கருத்திற்கு பா.ஜ., கண்டனம்
வங்கதேசம் போல் இங்கும் நடக்கலாம்' : குர்ஷித் கருத்திற்கு பா.ஜ., கண்டனம்
ADDED : ஆக 07, 2024 10:18 PM

புதுடில்லி : 'வங்கதேசத்தில் நடப்பது இந்தியாவிலும் நடக்கலாம்' என, காங்., மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்ததற்கு, பா.ஜ., நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
சமீபத்தில், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், 'வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்தியாவிலும் நடக்கலாம்' என்றார். இதற்கு பா.ஜ.,வினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து, பா.ஜ., - எம்.பி., ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில், ''காங்., செயற்குழு உறுப்பினர் சல்மான் குர்ஷித், அராஜக கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது, தேசத் துரோகம். தோல்வியை மறைக்க, காங்., இது போன்ற அராஜக கருத்துக்களை வெளியிடுவது, துரதிர்ஷ்டவசமானது,'' என்றார்.
டில்லியில் நேற்று, பா.ஜ., - எம்.பி., சம்பித் பத்ரா, நிருபர்களிடம் கூறுகையில், ''வங்கதேசத்தில் நடக்கும் சம்பவங்கள் இந்தியாவிலும் நடக்க வேண்டும் என, பிரதான எதிர்க்கட்சியான காங்., விரும்புகிறதா? என்ன மாதிரியான மனநிலை இது?
''மக்கள் மன்றத்தில் தோல்வி அடைந்து விட்டு, அராஜகத்தை கட்டவிழ்த்து விட, காங்., முயற்சிக்கிறது. கட்சியின் மூத்த தலைவர் இப்படி கருத்து தெரிவிக்கையில், அதை கண்டிக்காமல் காங்., வேடிக்கை பார்க்கிறது. அக்கட்சியின் எண்ணத்தையே, சல்மான் குர்ஷித் பிரதிபலித்திருக்கிறார்,'' என்றார்.