அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியல் பா.ஜ., - எம்.எல்.ஏ., கோரிக்கை
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் பட்டியல் பா.ஜ., - எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 07, 2024 05:45 AM

பெங்களூரு : 'கர்நாடகாவில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியலை, அந்தந்த மாவட்ட பிளாக் கல்வி அதிகாரிகள், வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலருக்கு, ராஜாஜி நகர், பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, அவர் எழுதியுள்ள கடிதம்:
கர்நாடகாவில் 17,329 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில், 1,695 பள்ளிகள் சட்ட விரோதமாக இயங்குகின்றன என்று அரசு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பல பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்டதா அல்லது அங்கீகரிக்கப்படாததா என்று தெரியவில்லை. 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஏற்கனவே துவங்கி விட்டது.
பள்ளி பதிவுக்கு அனுமதி பெறாமல் இருப்பது; அனுமதி இல்லாமல் பள்ளிகள் தரம் உயர்த்துவது; ஒரு பாடத்திட்டத்துக்கு அனுமதி பெற்று மற்றொரு பாடத்திட்டம் கற்பித்தல்; அனுமதியின்றி கூடுதல் துறைகள் வைத்திருத்தல் என பல வழிகளில், தனியார் பள்ளிகள் விதிகள் மீறி உள்ளன.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள், அங்கீகரிக்கப்பட்டதா அல்லது அங்கீகரிக்கப்படாததா என்பதை அறிய பெற்றோருக்கு உரிமை உண்டு. இது பற்றி தெரிவிக்க வேண்டியது கல்வி துறையின் கடமை.
இது தொடர்பாக, ஏப்., 24ம் தேதிக்குள் மாவட்ட கல்வி துறை அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்ட, கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. காலக்கெடு முடிந்து இரண்டு வாரம் ஆன பின்னரும், பிளாக் கல்வி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் பட்டியலை உடனடியாக அறிவிக்க, பிளாக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.