'லாக் அப்'பில் தர்ஷன்; சிறையில் பவித்ரா இரவு முழுதும் துாக்கமின்றி தவிப்பு
'லாக் அப்'பில் தர்ஷன்; சிறையில் பவித்ரா இரவு முழுதும் துாக்கமின்றி தவிப்பு
ADDED : ஜூன் 22, 2024 04:55 AM

பெங்களூரு : பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா, இரவில் துாக்கமின்றி தவித்தார். இது போல், போலீஸ் நிலைய லாக் - அப்பில் உள்ள நடிகர் தர்ஷன் கண்ணீரும், கம்பலையுமாக தவிப்புடன் இருந்தார்.
சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகர் ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன், 47, அவரது தோழி பவித்ரா கவுடா, 33 உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், போலீஸ் காவல் முடிந்து, பவித்ரா உட்பட 10 பேர் நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
தர்ஷன் உட்பட நான்கு பேரை போலீசார் இரண்டு நாட்கள் காவலில் எடுத்துஉள்ளனர். அவர்களின் போலீஸ் காவலும் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நான்கு பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
துாக்கமின்றி தவிப்பு
ரேணுகாசாமி கொலையில் கடந்த 11ம் தேதி தர்ஷன் கைது செய்யப்பட்டார். அவரை போலீஸ் நிலையத்தின் முதல் மாடியில் உள்ள அறையில் வைத்து தான், போலீசார் விசாரித்து வந்தனர். இரவிலும் அந்த அறையிலேயே துாங்கினார். ஆனால் நேற்று முன்தினம் அவரை மீண்டும் காவலில் எடுத்ததும், போலீஸ் நிலையத்தில் உள்ள செல்லில் அடைத்துள்ளனர்.
அந்த செல்லில், தரையில் தர்ஷன் படுத்துள்ளார். ஆனால், அவருக்கு துாக்கம் வரவில்லை. இதனால் நேற்று அதிகாலை வரை தவித்ததாக சொல்லப்படுகிறது. இதுபோல பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட பவித்ராவும், துாக்கம் இன்றி தவித்துள்ளார். இவர்கள் இருவரும் வெளியில் இருந்த போது, சொகுசாக வாழ்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாட்சிகள் கலைப்பு
இந்நிலையில், நேற்று காலை தர்ஷன் உட்பட நான்கு பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தர்ஷனை காப்பாற்றுவதற்காக, வெளியில் இருந்து சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக போலீசார் கருதுகின்றனர். அவர்களை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ரேணுகாசாமியை கொலை செய்த பின்னர், தர்ஷன் யார், யாரிடம் மொபைல் போனில் பேசினார் என்றும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
'டார்ச்லைட்' மின்சாரம்
ரேணுகாசாமியை தாக்கிய போது, அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சியதாக கொலையாளிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் எலக்ட்ரிக் டார்ச் லைட்டை வைத்து, ரேணுகாசாமி உடல் மீது மின்சாரம் பாய்ச்சியது தெரியவந்துள்ளது.
பவித்ரா கவுடாவை பார்த்ததும் அவரது காலில் விழுந்து, ரேணுகாசாமி மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனாலும் அவரை, பவித்ரா செருப்பால் அடித்ததும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
ரூ.65 லட்சம் பறிமுதல்
பெங்களூரு ஆர்.ஆர்.,நகரில் உள்ள தர்ஷனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது 37 லட்சம் ரூபாய் சிக்கி இருந்தது. தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி வீட்டிலும் 3 லட்சம் ரூபாய் சிக்கியது. இந்த வழக்கில் தர்ஷனை சிக்க வைக்காமல் இருக்க, மூன்று பேர் முதலில் சரண் அடைந்தனர். அவர்களுக்கு 30 லட்சம் ரூபாயை தர்ஷன் கொடுத்துஉள்ளார்.
ரேணுகாசாமியை கொலை செய்த அன்று, தன் நண்பரான மோகன்ராஜ் என்பவரிடமிருந்து, தர்ஷன் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதும் தெரிந்தது. தர்ஷன், விஜயலட்சுமி, ரேணுகாசாமி உடலை கால்வாயில் வீசிய பவன் வீடுகளில் இருந்து 65 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஐ.டி., கிடுக்கி
ஒரு வழக்கில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சிக்கினால், அது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். தற்போது 65 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து இருப்பதால், வருமான வரித்துறைக்கு கடிதம் எழுதவும் தயாராகி வருகின்றனர்.
............
பாக்ஸ்கள்
* பெண் ரசிகை ஆவேசம்
மைசூரு கே.ஆர்.நகரை சேர்ந்தவர் மங்களா. நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகை ஆவார். தர்ஷனின் உருவப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மொபைல் போன் வீடியோவில் மங்களா பேசுகையில், 'தர்ஷன் கொலை வழக்கில் சிக்கியதற்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி தான் காரணம். மாண்டியாவில் சுமலதா போட்ட பிச்சையால், தற்போது மத்திய அமைச்சராகி உள்ளார்' என்றார். மேலும் குமாரசாமி பற்றி ஆபாசமான வார்த்தைகளில் திட்டினார். இதுகுறித்து கே.ஆர்., நகர் போலீசில், ம.ஜ.த.,வினர் புகார் செய்துள்ளனர்.
........
* தயாரிப்பாளர் வக்காலத்து
கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சீனிவாஸ் கூறுகையில், ''தர்ஷனை எனக்கு 20 ஆண்டுகளாக தெரியும். அவர் நல்ல மனிதர். சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து, இப்போது கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் மூன்று மாதங்களில் சிறையில் இருந்து வெளியே வருவார். அதன்பின், சினிமா படப்பிடிப்புகளில் பங்கேற்பார். பீனிக்ஸ் பறவை போன்று, உயிர்த்தெழுந்து வருவார் என்று நம்பிக்கை உள்ளது,'' என்றார். தர்ஷன் படங்களுக்காக, அவரை நம்பி, இவர் 150 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார்.
.........
* ஊடகத்தினருக்கு திட்டு
பரப்பன அக்ரஹாரா சிறையில், பவித்ராவுக்கு சாதாரண கைதிகள் அடைக்கும் 'டி' பிளாக் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு 6024 என்ற கைதி எண் கொடுக்கப்பட்டு உள்ளது. சிறையில் மற்ற கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவே, பவித்ராவுக்கும் வழங்கப்படுகிறது.
இவரை பார்ப்பதற்கு நேற்று அவரது பெற்றோர், தம்பி வந்தனர். பவித்ராவுக்கு ஆறுதல் கூறினர்.
பின், பவித்ராவின் தம்பியிடம், ஊடகத்தினர் ஏதோ கேட்டனர். இதனால் கடுப்பான அவர், 'உங்களுக்கு வேறு வேலையே இல்லையா' என்று திட்டி விட்டு சென்றார்.
.......
* ஷெட் உரிமையாளருக்கு நோட்டீஸ்
ரேணுகாசாமியை கொலை செய்த ஷெட், ஜெயண்ணா என்பவருக்கு சொந்தமானதாகும். கொலை தொடர்பாக அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல் பெற்றிருந்தனர். இந்நிலையில், 2008ம் ஆண்டு முதல் ஷெட்டிற்கு சொத்து வரி செலுத்தாதது தெரியவந்துள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்த வேண்டும் என்று, ஜெயண்ணாவுக்கு, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
......
* வாடகை வீட்டில் தர்ஷன் தம்பி
கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன், பெங்களூரு ஆர்.ஆர்., நகரில் இரண்டு மாடி வீட்டில் வசித்து வந்தார். அவரது தோழி பவித்ராவுக்கு, மூன்று மாடி வீடு வாங்கி கொடுத்திருந்தார். மனைவி விஜயலட்சுமி பனசங்கரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார்.
ஆனால், தர்ஷனின் சொந்த தம்பியான தினகர், பெங்களூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தர்ஷனின் தாய் மீனா மைசூரில், சிறிய வீட்டில் தனியாக வசிக்கிறார்.
.....
* சுமலதா 'கப்சிப்'
மாண்டியா முன்னாள் எம்.பி., சுமலதா. 2019 லோக்சபா தேர்தலில் சுமலதா வெற்றி பெற, தர்ஷன் தீவிர பிரச்சாரம் செய்தார். தர்ஷனை தனது மகன் என்று, சுமலதா அடிக்கடி கூறுவார். ஆனால் தர்ஷன் கொலை வழக்கில் கைதானதிலிருந்து, அவர் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், மவுனம் சாதித்து வருகிறார்.
.......
* கணக்குகள் முடக்கம்
கொலை வழக்கில் தர்ஷன் கைதானதும், அவரது மனைவி விஜயலட்சுமியின் சமூக வலைதள பக்கங்களுக்கு பலரும் ஆபாச குறுந்தகவல் அனுப்பி, தர்ஷனை திட்டி தீர்த்தனர். இதனால் அவர் தனது சமூக வலைதள கணக்குகளை முடக்கி வைத்துள்ளார்.
......
* கருத்து வேறுபாடு
கடந்த 1996ம் ஆண்டு வெளியான, 'ஜானுமாத ஜோடி' என்ற கன்னட திரைப்படத்தில், இயக்குனர் கவுரிசங்கரின் உதவியாளராக தர்ஷன் பணியாற்றினார். சில நேரம் கேமரா லைட் பாயாகவும் வேலை செய்தார். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில், கவுரிசங்கர் தயாரித்த இன்னொரு படத்திற்கு, மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பார்வதம்மா தயாரிப்பாளராக இருந்தார். அந்த படத்தில், 'ஜிம்மி ஜிப்' ரக கேமரா பயன்படுத்தப்பட்டது. அந்த கேமராவை பயன்படுத்த பயிற்சி பெற வேண்டும் என்று தர்ஷனிடம், பர்வதம்மா கூறியுள்ளார்.
இதனால் உள்ளுக்குள் கோபமடைந்த தர்ஷன், பர்வதம்மா, தன் மகன் புனித் ராஜ்குமாரை வளர்க்க நினைக்கிறார் என்று நினைத்துக் கொண்டார். இதனால் ராஜ்குமார் குடும்பத்திற்கும், தர்ஷனுக்கும் மனக்கசப்பு இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.